Offline
Menu
மலேசிய ஷரியா நீதிமன்றங்களில் நீதிபதிகள் தட்டுப்பாடு
By Administrator
Published on 10/04/2026 17:00
News
ஒரு நாளில் 30 வழக்குகளைக் கையாளும் அவலநிலை!

மலேசிய ஷரியா நீதிமன்றங்களில் நிலவும் கடுமையான நீதிபதிகள் தட்டுப்பாடு காரணமாக, ஒரு நீதிபதி ஒரு நாளைக்கு 30 வழக்குகள் வரை கையாள வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் வழக்கு விசாரணைகள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் நீதித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

ஷரியா நீதித் துறை தலைமை இயக்குநர் (நீதித்துறை) அபு சுஃபியான் அபு யசீஸ் இது குறித்துக் கூறுகையில், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் ஆகிய பகுதிகளில் பெருமளவிலான வழக்குகளைக் கையாளப் போதிய நீதிபதிகள் இல்லாததால், நீதிபதிகளின் எண்ணிக்கையை உடனடியாக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்றார்.

 

“ஜீவனாம்சம் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கோலாலம்பூர் ஷரியா நீதிமன்றத்தில் தனிப் பிரிவுகளும் நீதிமன்றங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. எனினும், ஒட்டுமொத்த வழக்குகளின் சுமையைக் குறைக்க கூடுதல் நீதிபதிகளின் நியமனம் மிக அவசியமாகும்’ என்று அவர் சொன்னார்.

 

இதேவேளையில், சிலாங்கூர் மாநில ஷரியா உயர் நீதிமன்றத்தில் போதிய நீதிபதிகள் இல்லாததே வழக்குகள் தாமதமாவதற்கு முக்கியக் காரணம் என அம்மாநில ஷரியா முதன்மை நீதிபதி நென்னி ஷுஹைதா ஷம்சுடின் சுட்டிக்காட்டினார்.

 

தற்போது சிலாங்கூரில் 5 ஷரியா உயர் நீதிமன்ற நீதிபதிகள் மட்டுமே சேவையாற்றி வரும் நிலையில், ஒவ்வொரு நீதிபதியும் ஆண்டுக்கு சராசரியாக 1,000 வழக்குகளைக் கையாள வேண்டியுள்ளது. இதன் காரணமாக ஆண்டின் மொத்த வழக்குகளில் 70 சதவீதம் மட்டுமே முடிவுக்கு வருகின்றன; மீதமுள்ள 30 சதவீத வழக்குகள் அடுத்த ஆண்டுக்குத் தள்ளிவைக்கப்படுகின்றன. டிஜிட்டல் முறைமைக்கு மாறினாலும், நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்தினால் மட்டுமே வழக்குகளை 1.5 ஆண்டுகளுக்குள் விரைந்து முடிக்க முடியும் என அவர் வலியுறுத்தினார்.

Comments