Offline
Menu
ஆகஸ்ட் 2027-க்குள் 16ஆவது பொதுத் தேர்தலை அன்வார் அறிவிப்பார்
By Administrator
Published on 10/21/2026 14:00
News
ஹம்சா கருதுகிறார்

பக்காத்தான் ஹராப்பான், அம்னோ ஆகிய கட்சிகளுக்கு இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் அன்வார் இப்ராஹிம் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் 16ஆவது பொதுத் தேர்தலை (GE16) அறிவிப்பார் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுடின் நம்புகிறார். 2027ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்த ஒற்றுமை அரசாங்கத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள அன்வாரால் இயலாது என்று அவர் கூறினார். கடந்த நான்கு ஆண்டுகளாக அமைதி காத்து வந்த பக்காத்தான் ஹராப்பான்  நாடாளுமன்ற உறுப்பினர்கள், துணைப் பிரதமர் அஹமட் ஜாஹிட் ஹமிடியின் நீதிமன்ற வழக்குகள் குறித்து இப்போது கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

 

ஜனவரி மாதம், அம்னோ தலைவரும் பாரிசான் நேசனல் தலைவருமான ஜாஹித் மீதான ஊழல், நம்பிக்கை மோசடி மற்றும் பணமோசடி தொடர்பான 47 குற்றச்சாட்டுகள் குறித்து, மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று சட்டத்துறை அலுவலகம் முடிவெடுத்தது. இந்த முடிவு டிஏபி (DAP) தலைவர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது. அவர்களுக்குள் பிளவு ஏற்படத் தொடங்கிவிட்டது என்று நான் நினைக்கிறேன். எனவே, அதற்கு முன்பாகவே அவர் தேர்தலை அறிவிக்க வேண்டியிருக்கும் என்று பிஎஃப்எம் வானொலிக்கு அளித்த நேர்காணலில் ஹம்சா கூறினார்.

 

அடுத்த பொதுத் தேர்தல் பிப்ரவரி 2028க்குள் நடத்தப்பட வேண்டும். பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான கோரிக்கைகளை பரிசீலிக்கத் தயாராக இருப்பதாக கடந்த மாதம் அன்வார் தெரிவித்திருந்தார். மேலும், 2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தென்கிழக்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகளை (சீ விளையாட்டு) பயன்படுத்தி, பொதுமக்களிடையே நற்பெயரைப் பெற்று, அதற்கு உடனடியாகப் பிறகு தேர்தலை அறிவிக்க அன்வார் திட்டமிடலாம் என்று ஹம்சா குறிப்பிட்டார். இந்த விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் 18 முதல் 29 வரை நடைபெற உள்ளன.

 

இது நடக்குமா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. அதைப்பற்றி எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. மேலும், 2027-ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் பல “சலுகைகள்”  இடம்பெற்றுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்திற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தேர்தல் நெருங்குவதற்கான மற்றொரு அறிகுறி என்றும் ஹம்சா கூறினார். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில், தேர்தல் ஆணையத்திற்கான ஒதுக்கீடு முந்தைய ஆண்டின் 167 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 367 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

Comments