ஆலந்தூர், இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹரிஷ் தற்கொலை வழக்கில் கைதான யூடியூபர் ஜேசன் சாமுவேலுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
யூடியூபர் தற்கொலை
சென்னையை அடுத்த கானத்தூர் நாகாத்தம்மன் தெருவில் வசித்து வந்தவர் ஹரிஷ் (வயது 27). யூடியூபரான இவர். இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் நிதி முதலீடு மற்றும் சேமிப்பு குறித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். புதுச்சேரியைச் சேர்ந்த இவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 லட்சத்துக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களை கொண்டிருந்தார்.
இவருக்கும், மற்றொரு இன்ஸ்டாகிராம் பிரபலத்துக்கும் இடையே இணையவழியில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஹரிஷின் வீடியோக்களை விமர்சித்து அவர் வீடியோ வெளியிட்டதாகவும், இதையடுத்து சிலர் ஹரிஷின் வீடியோக்களை அவதூறாக விமர்சிக்க தொடங்கியதாகவும் தெரிகிறது.
இதனால் மனம் உடைந்த ஹரிஷ், கடந்த 19-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ரூ.3 கோடி கேட்டு மிரட்டல்
இதுதொடர்பாக ஹரிஷின் தந்தை விநாயகம், கானத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது:-
கடந்த 18-ந்தேதி புதுச்சேரியை சேர்ந்த யூடியூபர் ஜேசன் சாமுவேல் (30) என்பவர். தனது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூப் பக்கங்களில் ஹரிஷ் மீது ஆதாரமற்ற மோசடி குற்றச்சாட்டுகளை பதிவிட்டார்.
தனது சமூகவலைதள செல்வாக்கை பயன்படுத்தி ஹரிசுக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பி, அவரை பொதுவெளியில் அவமானப்படுத்தி, இணையவழி துன்புறுத்தலில் ஈடுபட்டார். இதனால் ஹரிஷின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.
மேலும், தற்கொலை செய்வதற்கு முன்பு ஹரிஷ் வெளியிட்ட வீடியோ பதிவில், தனது தற்கொலைக்கு காரணம் ஜேசன் சாமுவேல் என குறிப்பிட்டிருந்ததுடன், ஜேசன் சாமுவேல் தன்னிடம் ரூ.3 கோடி கேட்டதாகவும், பணம் தராவிட்டால் சமூக வலைதள கணக்குகளை முடக்கிவிடுவதாகவும். புதிதாக கணக்கு தொடங்கினாலும் அதையும் முடக்கிவிடுவதாகவும் மிரட்டியதாக கூறி இருந்தார்.