மக்கள் ஓசை நாளிதழின் இணை ஆசிரியரும் மலேசியத் தமிழ்ப்பத்திரிகை உலகில் முக்கிய ஆளுமையாகவும் விளங்கிய திரு. பி.ஆர்.ராஜன் மறைவு மலேசிய தமிழ்ப்பத்திரிகை உலகிற்குப் பேரிழப்பாகும்.சுமார் 50 ஆண்டு காலம் மலேசியத் தமிழ்ப்பத்திரிகை உலகில் பணியாற்றியவர். பத்திரிகையின் எல்லா துறைகளிலும் மிக நீண்ட அனுபவம் வாய்ந்தவராக விளங்கினார். திடீரென்று நோய்வாய்ப்பட்ட காரணத்தினால் செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று அதிகாலை 4 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.
கடந்த 1958ஆம் ஆண்டு கெடா மாநிலம் சுங்கைபட்டாணியில் பூபாலன்- ரத்னா தம்பதிக்கு மூத்த புதல்வராக பிறந்தவர் ராஜன். பின்னர் இளம் வயதில் அவரது குடும்பம் சுங்கைபூலோவுக்கு குடியேறியது. அங்கு தமிழ்ப்பள்ளியில் தமது ஆரம்பக்கல்வியை தொடங்கினார். பின்னர் அவரது குடும்பம் கோலாலம்பூர் ஜின்ஜாங் உத்தாரா பகுதிக்கு குடியேறியது.இடைநிலைப்பள்ளியை முடித்துக்கொண்ட ராஜன் கடந்த 1976ஆம் ஆண்டு தமிழ்மலர் பத்திரிகையில் செய்தியாளராக பணியாற்றத் தொடங்கினார். பின்னர் சிங்கப்பூரில் தமிழ்முரசு நாளிதழிலில் ஓராண்டு காலம் வேலை செய்தபிறகு மீண்டும் தமிழ்ப்பத்திரிகைக்கு திரும்பினார்.
வள்ளல் ஆறுமுகம் பிள்ளை நடத்திய தமிழ்மலர் பத்திரிகையில் ராஜன் துணை ஆசிரியராக வேலை செய்தார். சில பிரச்சினைகள் காரணமாக தமிழ்மலர் மூடப்பட்ட பிறகு தினமணி நாளிதழ் தோற்றுவிக்கப்பட்டது. அதில் அவர் துணை ஆசிரியராக பணியாற்றத் தொடங்கினார்.திருவாளர்கள் பி.எல்.கே.ராஜன், அப்துல் முத்தலிப், நா. ஆண்டியப்பன், தில்லை, பஞ்சு, தோ.மாணிக்கம், பழ. எ. அன்பழகன், வில்வமலர் போன்ற அனுபவம் வாய்ந்த பத்திரிகையாளர்களுடன் இணைந்து பணியாற்றினார்.இந்த காலகட்டத்தில் ஆங்கிலம்- மலாய் மொழி ஆகியவற்றில் மொழிபெயர்ப்பதில் சிறந்து விளங்கினார். அந்தச் சமயத்தில் அவர் கெர்லிங் கொலை வழக்கு. மலேசிய அழகி ஜீன் பிரேரா கொலை வழக்கு போன்ற செய்திகளை சேகரித்து வழங்கினார்.
மேலும் விளையாட்டுத்துறையிலும் அவர் ஆர்வம் காட்டினார். மெர்டேக்கா கிண்ண கால்பந்து, சீபோட்டிகள், ஒலிம்பிக் கால்பந்துப் போட்டி தேர்வாட்டங்கள் ஆகிய செய்திகளைச் சேகரித்து வழங்கினார். மேலும் 1985ஆம் ஆண்டு மலேசிய விளையாட்டாளர் சங்கம் தோற்றுவிக்கப்பட்டபோது அதன் செயலவை உறுப்பினராகவும் பணியாற்றினார். மேலும் மெர்டேக்கா அரங்கம், நெகாரா அரங்கம் ஆகியவற்றை நிர்வகிக்கும் செயற்குழுவிலும் அவர் உறுப்பினராக சேவையாற்றி இருக்கிறார்.
மலேசியப் பத்திரிகையாளர் கழகம் நடத்திய போட்டியின்போது மிகச்சிறந்த இளம் தமிழ்ப்பத்திரிகையாளராகவும் அவர் தேர்வு செய்யப்பட்டார். மேலும் அப்போதைய சோவியத் யூனியன் குடியரசாக இருந்த உஸ்பெகிஸ்தான் நாட்டிற்கு மலேசிய பத்திரிகையாளர்கள் மேற்கொண்ட நல்லெண்ணப் பயணத்திலும் அவர் மலேசியாவை பிரதிநிதித்து கலந்துகொண்டார். இளம் வயதிலேயே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
அவரின் தந்தையார் பூபாலனும் அந்த காலத்தில் மலேசிய திராவிடர் கழகத்தில் முக்கியத் தலைவராக விளங்கியவர். அரைநூற்றாண்டு காலம் தமிழ்ப்பத்திரிகையில் பணியாற்றிய ராஜனின் மறைவு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.