Offline
Menu
மாவட்ட தலைநகரங்களில் ஏ.சி.வசதியுடன் டியூசன் சென்டர் தொடங்க நடிகர் தனுஷ் திட்டம்
By Administrator
Published on 10/29/2026 13:00
News

சென்னை, நடிகர் தனுஷ் ‘தமிழக எழுச்சிக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், நற்பணி இயக்கமாக மாற்றப்பட்ட அவரது ரசிகர் மன்றங்களின் கட்டமைப்பை வலுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

 

நடிகர் தனுஷ் அரசியலில் அடியெடுத்து வைக்க இருக்கும் நிலையில், அவரது அடுத்த மூவ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் தனது ரசிகர் மன்றத்தை நற்பணி இயக்கமாக மாற்றினார் தனுஷ். அதுமட்டுமல்லாமல், தனது பிறந்த நாள் விழாவில் மக்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்க வேண்டும் என பேசியிருந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை தனுஷ் நற்பணி இயக்கத்தின் சார்பில் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2000 பெண் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

இந்தக் கூட்டத்தில் நடிகர் தனுஷ் அரசியல் ரீதியான கருத்துகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அப்படி எதுவும் பேசவில்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தனுஷ், 2000 பெண்களுக்கும் தலா ஒரு காமாட்சி அம்மன் விளக்கு பரிசாக அளித்தார்.

 

இந்நிலையில், அடுத்த கட்ட நகர்வாக, தனுஷ் நற்பணி இயக்கம் சார்பில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏசி வசதியுடன் கூடிய டியூஷன் சென்டர் அமைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 டியூஷன் சென்டரில் 3 ஆசிரியர்கள், 1 உதவியாளர் என நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு ஊதியமும் நற்பணி இயக்கம் சார்பில் இருந்து தரவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 

முதலில் மாவட்ட தலைநகரங்களில் மட்டும் உருவாக்கப்பட்டு, பின்னர் 234 தொகுதிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை வருகின்ற ஜனவரி மாதம் முதல் தொடங்கும் நற்பணி இயக்கத்தின் சார்பில் திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷின் அடுத்தடுத்த நகர்வுகள் அரசியலை நோக்கி இருப்பதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வரக்கூடிய நிலையில், முதல் தலைமுறை வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் பள்ளி மாணவர்களுக்கு ஏசி வசதியுடன் கூடிய இலவச டியூஷன் சென்டர்களை அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறார்கள்.

Comments