Offline
Menu
ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
By Administrator
Published on 11/03/2026 13:00
News
முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

சென்னை, பணியின் போது உயிரிழந்த ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

 

இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

 

அரியலூர் மாவட்டம், தளவாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலைக் காவலர் ராஜகண்ணன் (வயது 32), த/பெ. ராதாகிருஷ்ணன் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சி.வெங்கடேசன் (வயது 48), த/பெ. சின்னசாமி ஆகியோர் கடந்த 29.10.2026 இரவு, காவல் பீட் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிலுப்பனூர் லாரிஷெட் அருகே மது போதையில் சந்தேகத்திற்கிடமாக இருந்த மூவரை விசாரித்து எச்சரிக்கை செய்து அனுப்பிவைத்த பின்னர், மீண்டும் அவர்கள் ஈச்சங்காடு பிரதான சாலையில் சந்தேகத்திற்கிடமான நிலையில் இருந்ததால், அவர்களை விசாரிக்க முற்பட்டபோது, அவர்கள் தாக்கியதில் இரண்டாம் நிலைக் காவலரும், ஊர்காவல் படையைச் சேர்ந்த நபரும் காயமுற்று செந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், ஊர்க்காவல்படையைச் சேர்ந்த சி.வெங்கடேசன் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.

 

ஊர்க்காவல்படையைச் சேர்ந்த சி.வெங்கடேசனின் உயிரிழப்பு தமிழ்நாடு ஊர்காவல்படைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

 

முதல்-அமைச்சர் விஜய் நிதியுதவி
சி.வெங்கடேசனை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments