Offline
Menu
சொகுசு கார் கவிழ்ந்து தீப்பிடித்ததில் இருவர் எரிந்து உயிரிழந்தனர்
By Administrator
Published on 11/11/2026 12:00
News

ஜோகூர் பாரு: சொகுசு கார் ஒன்று தீப்பிடித்ததில் இருவர் எரிந்து உயிரிழந்தனர்; மேலும் இருவர் காயமடைந்தனர். செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) அதிகாலை 4.35 மணியளவில் பெர்மாஸ் ஜெயாவில் உள்ள கோல்ஃப் கிளப் ஒன்றிற்கு அருகில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக, ஜோகூர் ஜெயா தீயணைப்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தளபதி ரசாலி உசேன் தெரிவித்தார்.

 

தீப்பிடிப்பதற்கு முன்பாகவே கார் விபத்துக்குள்ளானதாகக் கருதப்படுகிறது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரத்தில் கவிழ்ந்திருக்கலாம். இந்தச் சம்பவத்தில் மொத்தம் ஐந்து பேர் சிக்கினர். அவர்களில் மூவர் தீப்பிடித்த வாகனத்திலிருந்து வெளியேற முடிந்தது. ஆனால் மற்ற இருவர் தீயில் சிக்கி உயிரிழந்தனர் என்று அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

தப்பி வந்தவர்களில் இருவர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்; மூன்றாவது நபர் காயமின்றி உயிர் தப்பினார் என்று அவர் மேலும் கூறினார். பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ரசாலி தெரிவித்தார். மேலும், அந்த கார் சுமார் 90 விழுக்காடு எரிந்து சேதமடைந்ததாகவும் அவர் கூறினார்.

Comments