Offline
Menu
அசஹான் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரின் தேர்தல் பிரதிநிதி சாலை விபத்தில் உயிரிழப்பு!
By Administrator
Published on 11/12/2026 15:00
News

மலாக்கா மாநிலத்தின் அசஹான் சட்டமன்றத் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரின் தேர்தல் பிரதிநிதியாகச் செயல்பட்டு வந்த 62 வயதான சாமிவேல் த/பெ ஜெயராஜ், சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

இன்று காலை சுமார் 11.30 மணியளவில், நியாலாஸ் சாலையில் அமைந்துள்ள அசஹான் பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் நடவடிக்கை மையத்தின் முன்பாக இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேர்தல் தொடர்பான அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதற்காக அலோர் காஜா நில அலுவலகத்திற்கு அவர் தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது, பழங்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று அவரது காருடன் மோதியதாகக் கூறப்படுகிறது. 

 

இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சாமிவேல் ஜெயராஜ், கட்சிப் பணிகளில் இரவு பகல் பாராமல் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் என்றும், நீண்டகாலமாகக் கட்சியின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், அவர் அலோர் காஜா பிகேஆர் கிளையின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். அத்துடன், அசஹான் சட்டமன்றத் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளரின் தேர்தல் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வந்தார்.

 

இதற்கிடையே, உயிரிழந்த சாமிவேலின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அலோர் காஜா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவம் குறித்த தகவலை அசஹான் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டெனேஷ் தெரிவித்தார்.

 

கட்சிப் பணிகளில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வந்த சாமிவேலின் திடீர் மறைவு, கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக டெனேஷ் தெரிவித்தார்.

Comments