Offline
Menu
மலேசியாவிலேயே மிக உயரமான முருகனின் வேல்!
By Administrator
Published on 11/16/2026 15:00
News
லாபுவான் திருமுருகன் ஆலயம் புதிய சாதனை!

லாபுவான், 

மலேசியாவிலேயே மிக உயரமான முருகப்பெருமானின் வேல் அமைப்பைக் கொண்ட ஆலயமாக லாபுவான் திருமுருகன் ஆலயம் மலேசிய சாதனைப் புத்தகத்தில் (Malaysia Book of Records) இடம்பிடித்துள்ளது.

 

13.18 மீட்டர் உயரம் கொண்ட இந்த வேல், நாட்டிலேயே மிக உயரமான வேல் அமைப்பாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான சாதனைச் சான்றிதழ் இன்று ஆலய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

 

50 ஆண்டுகளுக்கும் மேலாக லாபுவான் இந்து மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்கிவரும் திருமுருகன் ஆலயத்திற்கு, இந்த அங்கீகாரம் புதிய வரலாற்றுச் சாதனையாக அமைந்துள்ளது.

 

முருகப்பெருமானின் வேல் ஞானம், வீரம், நீதி மற்றும் பாதுகாப்பின் அடையாளமாக விளங்குவதாக ஆலய அறங்காவலரும் ஆலோசகருமான எம். சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்த வேல் ஆன்மிக அடையாளமாக மட்டுமின்றி, லாபுவானின் பன்முகக் கலாசாரப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் முக்கியச் சின்னமாகவும் திகழும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

சுமார் RM3.5 மில்லியன் செலவில் ஆலயம் புனரமைக்கப்பட்ட நிலையில், பக்தர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புடன் இந்த வேல் அமைப்பு கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறைவுசெய்யப்பட்டது.

 

இந்தச் சாதனை லாபுவானுக்குச் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதுடன், இளைய தலைமுறையினர் தங்களது சமய மற்றும் கலாசாரப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் ஊக்கமளிக்கும் என ஆலய நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Comments