பத்து பஹாட்: ரெங்கிட், ஜாலான் ஜயா டிரி (Jalan Jaya Diri) பகுதியில் நேற்று இரவு நிகழ்ந்த கார் விபத்தில், தாங்கள் பயணித்த கார் மற்றொரு காரின் மீது நேருக்கு நேர் மோதி தீப்பிடித்ததில், 17 வயது சிறுவன் உட்பட இருவர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
ரெங்கிட் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தளபதி கைருல் அஸ்மி நாட்மான் (Khairul Azmi Ngatman) கூறுகையில், இரவு 8:01 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து ஆறு தீயணைப்பு வீரர்கள் ஒரு தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர் என்றும் தெரிவித்தார்.
தீப்பிடித்த ‘புரோட்டான் சாகா பிஎல்எம்’ (Proton Saga BLM) காரில் சிக்கிக்கொண்ட 17 வயது சிறுவன் மற்றும் 22 வயது இளைஞர் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்றொரு காரான ‘புரோட்டான் வீரா’ (Proton Wira)-வில் இருந்த 37 மற்றும் 61 வயதுடைய இருவர் காயமடைந்தனர். இந்த விபத்தினால் ‘புரோட்டான் சாகா பிஎல்எம்’ காரின் சுமார் 60 விழுக்காடு பகுதி தீயில் எரிந்து அழிந்தது.
மீட்புக் குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு, பின்னர் காரில் கருகிய நிலையில் இருந்த இருவரின் உடல்களையும் மீட்டனர் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.