Offline
Menu
ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதார எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் APEC முடிவுகள்!
By Administrator
Published on 11/20/2026 10:00
News
பிரதமர் அன்வார் வலியுறுத்தல்!

ஷென்சென், 

ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள், அடுத்த பல தலைமுறைகளுக்குப் பிராந்திய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியையும் வளமான எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

 

சீனாவின் ஷென்சென் நகரில் இன்று நடைபெற்ற 33ஆவது APEC பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தில் மலேசியாவின் சார்பில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

 

உலக நாடுகளிடையே கருத்து வேறுபாடுகளும் போட்டிகளும் அதிகரித்து வரும் நிலையில், ஆசிய பசிபிக் நாடுகள் ஒற்றுமையுடனும் ஒத்துழைப்புடனும் செயல்பட வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

 

நாடுகளுக்கு இடையிலான வேறுபாடுகள் பிரிவினைக்கு வழிவகுக்கக் கூடாது என்றும், பொருளாதாரப் போட்டிகள் பரஸ்பர ஒத்துழைப்பைப் பாதிக்கக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

மேலும், பொருளாதார வளர்ச்சியின் பலன்கள் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே கிடைக்காமல், அனைத்து நாடுகளுக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும் என்று அன்வார் தெரிவித்தார்.

 

ஆசிய பசிபிக் நாடுகளின் ஒத்துழைப்பு, உலகின் பிற பகுதிகளுடனான பொருளாதார உறவுகளையும் வலுப்படுத்த வேண்டும். குறிப்பாக, வளரும் நாடுகள் மற்றும் உலகின் தெற்குப் பகுதி நாடுகளுடன் (Global South) வர்த்தக, முதலீட்டு உறவுகளை மேம்படுத்துவது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

 

இத்தகைய ஒத்துழைப்புகள் உலகப் பொருளாதாரத்தில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதுடன், அனைத்து நாடுகளுக்கும் நியாயமான வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் பொதுவான விதிமுறைகளும் நெறிமுறைகளும் அவசியம் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

 

புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அனைத்து நாடுகளுக்கும் பயனளிக்க வேண்டும். குறிப்பாக, வளரும் நாடுகள் தொழில்நுட்ப வளர்ச்சியால் பாதிக்கப்படாமல், அதன் மூலம் முன்னேற்றம் அடைவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

APEC அமைப்பில் மலேசியா உள்ளிட்ட 21 பொருளாதாரங்கள் உறுப்பினர்களாக உள்ளன.

 

உலக மக்கள்தொகையில் சுமார் 40 விழுக்காட்டினரையும், உலக வர்த்தகத்தில் ஏறக்குறைய பாதியையும், உலகப் பொருளாதாரத்தில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமான பங்கையும் இந்த அமைப்பு பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

APEC அமைப்பை உருவாக்கிய 12 ஆரம்பகால உறுப்பினர்களில் மலேசியாவும் ஒன்றாகும்.

Comments