Offline
Menu
15 மாதங்களில் ஏ.ஐ. செய்யப்போகும் மாற்றம்!
By Administrator
Published on 11/21/2026 11:00
News
இனி மனிதர்களுக்கு வேலையே இருக்காதா?

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக எதிர்காலத்தில் உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் வேலைவாய்ப்பை இழந்து, அரசின் நிதியுதவியை நம்பி வாழ வேண்டிய நிலை ஏற்படலாம் என்று பிரபல ஏ.ஐ. நிறுவனமான ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் எச்சரித்துள்ளார்.

வேலையை இழக்கும் மனிதர்கள்
ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் ஏ.ஐ. பாதுகாப்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் தாவோ லின் அமெரிக்காவைச் சேர்ந்த பாலிசேட் ரிசர்ச் அமைப்புக்கு அளித்த பேட்டியில் இந்த அதிர்ச்சிகரமான கருத்தை தெரிவித்துள்ளார்.

தற்போதைய வேகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் வளர்ந்தால், இன்னும் சுமார் 15 மாதங்களில் மனிதர்களை விட அதிக திறன் கொண்ட ஏ.ஐ. உருவாகலாம் என்று தாவோ லின் கணித்துள்ளார். அதாவது, மென்பொருள் உருவாக்கம், திரைப்படத் தயாரிப்பு, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலகின் சிறந்த நிபுணர்களுக்கு இணையாகவோ அல்லது அவர்களைவிட அதிக திறனுடனோ செயல்படும் வகையில் ஏ.ஐ. வளர்ச்சியடையலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அனைவரும் வேலையிழக்கும் அபாயம்
இது குறித்து அவர் கூறியதாவது:ஏ.ஐ. வளர்ச்சியால் முதலில் மனிதர்கள் தங்களது தற்போதைய வேலைகளை இழந்து, வேறு துறைகளுக்கு மாற வேண்டிய நிலை ஏற்படலாம். ஆனால், அந்த வேலைகளையும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கைப்பற்றும்போது, மனிதர்களுக்கு வேலை கிடைக்காத சூழல் உருவாகலாம் இதனால் உலகில் பெரும்பாலான மனிதர்கள் நிரந்தரமாக வேலைவாய்ப்பை இழந்து, தங்களது வாழ்வாதாரத்திற்காக அரசின் நிதியுதவியை மட்டுமே நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.அதேவேளையில், ஏ.ஐ. தொழில்நுட்பம் மனிதர்களை மிஞ்சினாலும் உடனடியாக அனைத்து வேலைகளும் பறிபோகாது. குறிப்பாக, உடல் உழைப்பு சார்ந்த வேலைகளில் மனிதர்களுக்கு மாற்றாக ரோபோக்களைப் பயன்படுத்துவதற்கு அதிக அளவிலான ரோபோக்களை உருவாக்கி பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டியிருக்கும். இதற்கு கால அவகாசம் தேவைப்படும்.

ஏ.ஐ. வளர்ச்சியை குறைக்க வேண்டும்
ஏ.ஐ. நிறுவனங்கள் தற்போதைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளின் வேகத்தை 4-ல் ஒரு பங்காகக் குறைக்க வேண்டும். ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு இணையாக அதன் பாதுகாப்பு அம்சங்களையும் மேம்படுத்துவதற்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்”என்று கூறினார்.

இவை தாவோ லின்னின் தனிப்பட்ட கணிப்புகளே தவிர, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணிப்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஏ.ஐ. பயன்பாடு அதிகமுள்ள பணிகளில் இதுவரை வேலையின்மை கணிசமாக அதிகரித்ததற்கான ஆதாரம் இல்லை என ஆந்த்ரோபிக்கின் ஆய்வும் தெரிவித்துள்ளது

Comments