சபா மாநிலத்தின் குனாக் பகுதியில் உள்ள செம்பனைத் தோட்டத்தில், தன்னுடன் பணியாற்றிய பெண் தொழிலாளியைப் பாராங் கத்தியால் வெட்டிக் கொலை செய்த பிலிப்பைன்ஸ் நாட்டவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
54 வயதுடைய ரோஜர் பசாகுவே குல்லானோ (Roger Pasague Cullano) என்பவருக்கே தாவாவ் உயர் நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்துள்ளது.
தனிப்பட்ட அதிருப்தி காரணமாகத் தன்னுடன் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அபிகெயில் டியாகோ மண்டி (Abigail Diego Mandi) என்ற பெண்ணைக் கொலை செய்த குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, நீதித்துறை ஆணையர் ஸ்டீவ் ரிட்டிகோஸ், குற்றவாளிக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து சிறைத்தண்டனையைக் கணக்கிடவும், தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர் அவரைக் குடிநுழைவுத் துறையிடம் ஒப்படைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்றவாளியின் வயதைக் கருத்தில் கொண்டு அவருக்குப் பிரம்படி தண்டனை விதிக்கப்படவில்லை.
கடந்த ஆண்டு ஜூன் 13ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10.15 மணிக்குள் குனாக், ஆம்பிள் லேண்ட் திங்காயு செம்பனைத் தோட்டத்தில் இந்தக் கொலைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவத்தன்று உயிரிழந்த பெண்ணின் மகன் காஸ்மர் டியாகோ ராட்ஸ்மான், தனது தாயின் அழைப்பைத் தொடர்ந்து செம்பனைப் பழங்களைச் சேகரிப்பதற்காகத் தோட்டத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது தாயைக் காணாத அவர், அருகில் சேறும் இரத்தக் கறைகளும் படிந்த நிலையில் நீண்ட பாராங் கத்தியை வைத்திருந்த குற்றவாளியைக் கண்டுள்ளார்.
பின்னர் மேற்கொண்ட தேடுதலில், செம்பனை ஓலைகள் மற்றும் புதர்களுக்கு அடியில் தனது தாய் காயங்களுடன் உயிரிழந்து கிடப்பதை அவர் கண்டுபிடித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்தப் பெண் மீதான தனிப்பட்ட அதிருப்தி காரணமாக அவரைப் பாராங் கத்தியால் தாக்கிக் கொன்றதாகக் குற்றவாளி ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் 302ஆவது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டது.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் முகமட் ஃபில்லானி சிஜி வாதிடுகையில், குற்றவாளியின் செயல் ஒரு தாயின் உயிரைப் பறித்ததுடன், அவரது சடலத்தைக் கண்ட மகனுக்கும் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
கொலையின் கொடூரத்தன்மையைக் கருத்தில் கொண்டு 30 முதல் 35 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் கோரப்பட்டது.
இதனிடையே, குற்றவாளியின் வயது, குடும்பப் பொறுப்புகள், சமூகச் சூழ்நிலை மற்றும் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் மூலம் நீதிமன்ற நேரம் மிச்சப்படுத்தப்பட்டமை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுமாறு அவரது வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டனர்.