Offline
Menu
நாடு முழுவதும் 34 தொழிற்சாலைகளில் அதிரடிச் சோதனை!
By Administrator
Published on 11/22/2026 14:00
News
519 வெளிநாட்டினர் கைது!

பெட்டாலிங் ஜெயா, 

மலேசியா முழுவதும் 34 தொழிற்சாலைகளைக் குறிவைத்து குடிநுழைவுத் துறை மேற்கொண்ட மூன்று நாள் அதிரடிச் சோதனையில், குடிநுழைவுச் சட்டங்களை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் 519 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த நவம்பர் 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட இந்தச் சிறப்பு நடவடிக்கையில், மொத்தம் 569 குடிநுழைவுத் துறை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணியாற்றுவதாக அடையாளம் காணப்பட்ட தொழிற்சாலைகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.

இந்த நடவடிக்கையின்போது மொத்தம் 1,702 பேரின் ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டதாக மலேசிய குடிநுழைவுத் துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 56 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்களில் வங்காளதேசம், மியான்மார், நேபாளம், இந்தோனேசியா, இந்தியா, சீனா, தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிள்ளான் தொழிற்சாலையில் 71 பேர் கைது!

இதனிடையே, சிலாங்கூர் மாநிலம் கிள்ளான், மேரு பகுதியில் உள்ள ஆணி தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் தனியாக அதிரடிச் சோதனை நடத்தப்பட்டது.

புத்ராஜெயாவிலுள்ள குடிநுழைவுத் துறை தலைமையகத்தைச் சேர்ந்த அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட இந்தச் சோதனையில், 131 பேரின் ஆவணங்கள் பரிசோதிக்கப்பட்டன.

அவர்களில் 71 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள், உளவுத்துறைத் தகவல்கள் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளின் அடிப்படையில் இந்தச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக குடிநுழைவுத் துறை விளக்கமளித்துள்ளது.

குறிப்பாக, உரிய ஆவணங்களின்றி வெளிநாட்டினரைப் பணியமர்த்துதல் மற்றும் குடிநுழைவு விதிமுறைகளை மீறி நாட்டில் தங்கியிருத்தல் போன்ற குற்றங்களை அடையாளம் காண்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.

கைது செய்யப்பட்ட அனைவரும் மேலதிக விசாரணைக்காக குடிநுழைவுத் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 

Comments