கொரிய தமிழ் அரசி அரசாண்ட கிமே நகரின் காயா கலாச்சார மேம்பாட்டு நிறுவனத்திற்கும் கொரிய தமிழ்ச் சங்கத்திற்கும் இடையே வரலாற்று ஆய்விற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்*
கிமே, கொரியா, 27 ஏப்ரல் 2024. கொரிய தமிழ் இராணி அரசாண்ட பெருமைக்குரிய கிமே தேசிய அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற காயா கலாச்சார மேம்பாட்டு நிறுவனத்தின் 9-ம் ஆண்டு காயா பௌத்தம் மற்றும் வரலாற்று ஆய்வு மாநாடு நடைபெற்றது.
மாநாட்டின் ஒரு பகுதியாக, காயா கலாச்சார மேம்பாட்டு நிறுவனத்திற்கும் கொரிய தமிழ்ச் சங்கத்திற்கும் இடையே வரலாறு மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தந்தில், இருதரப்பின் நிறுவனர்கள் முறையே பௌத்த துறவி தோ மியொங் அவர்களும், முனைவர் சு. இராமசுந்தரம் அவர்களும் கையெழுத்திட்டனர். இவ்வொப்பந்தம்,
தமிழ்நாட்டிற்கும் கொரியாவிற்கும் இடையேயான பௌத்த மத வழி தொடர்பு, வரலாறு, மொழி மற்றும் பண்பாடு தொடர்பான ஆராய்ச்சி, கருத்தரங்குகள், மாநாடுகள் மற்றும் மக்கள் நலன் தொடர்பான செயல்பாடுகளை இணைந்து நடத்துதலை உள்ளடக்குகிறது.
கொரிய தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் முனைவர் கோவி. சரவணன், இணைச் செயலாளர்கள் முனைவர் செலஸ்டின் ராஜா, முனைவர் சிவக்குமார், மூத்த உறுப்பினர்கள் திருமதி யசோதா இராமசுந்தரம், முனைவர் சோனைமுத்து மோகன்தாஸ், முனைவர் சிவசங்கரன், முனைவர் ஜெகதிஸ் குமார் ஆகியோரும் இந்நிகழ்ச்சியின்போது உடனிருந்தனர். முன்னதாக கொரிய தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் செ. அரவிந்த ராஜா, இணைச்செயலாளர் திரு ஆ பாரதி உள்ளிட்ட தற்போதைய
ஆளுமைக்குழுவினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். "இது ஒரு வரலாற்று நிகழ்வு. புனை கதைகளை விலக்கி கொரிய-தமிழ் மொழிகளுக்கிடையேயான வரலாற்றோடு தொடர்புடைய ஆவணங்களைத் தொகுத்து வெளியிட இவ்வொப்பந்தம் உறுதுணையாக இருக்கும்" என சங்க உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே கொரிய தமிழ்ச் சங்கத்தால் கடந்த ஆண்டு தமிழ்-கொரிய ஆராய்ச்சிக் கழகம் நிறுவப்பட்டிருந்த நிலையில், அதற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக அமைந்துள்ள இந்நிகழ்வு கொரியா-வாழ் தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.