டசல்டோர்ஃப்: 2024 யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஆஸ்திரிய அணியை 1 – 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஃபிரான்ஸ் அணி. இந்தப் போட்டியில் ஃபிரான்ஸ் அணி வீரர்கள் ஒருவர் கூடcகோல் அடிக்கவில்லை. எனினும், அந்த அணி வெற்றி பெற்றது.
போட்டியின் 38வது நிமிடத்தில் ஃபிரான்ஸ் அணியின் கேப்டனும், உலகின் முன்னணி கால்பந்து வீரருமான கிலியன் எம்பாப்பே கோல் அடிக்க முயன்றார். அப்போது குறுக்கே வந்த ஆஸ்திரிய வீரர்
மேக்ஸ்மிலியன் வோபர் பந்தை தன் தலையால் வேறு திசையில் அடிக்க முயன்றார். ஆனால், வோபர் தவறுதலாக ஆஸ்திரிய அணியின் கோல் பகுதிக்குள்ளேயே பந்தை தள்ளினார். இதைஅடுத்து பிரான்ஸ் அணிக்கு எளிதாக முதல் கோல் கிடைத்தது.
அதன்பின் இரண்டு அணிகளுமே கோல் அடிக்கவில்லை. போட்டி நேரமான 90 நிமிடங்கள் முடிந்த பின்பு 9 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்பட்டது. அப்போதும் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதை அடுத்து ஃபிரான்ஸ் 1 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 86 ஆவது நிமிடத்தில் ஆஸ்திரிய அணியின் கிரீஸ்மேன் ஃப்ரீ கிக் அடித்தார். அப்போது பந்தை தடுக்க குறுக்கே வந்த கிலியன் எம்பாப்பே, ஆஸ்திரிய வீரர் டான்ஸோவின் தோள்களில் இடித்துக் கொண்டார். அப்போது அவரது மூக்கு உடைந்து ரத்தம் வடிந்தது.
இந்த சம்பவத்தால் போட்டி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது. அதன் பின்பு அவர் சில நிமிடங்கள் வெளியேறிவிட்டு மீண்டும் ஆடுகளத்துக்கு வந்த போது குழப்பம் ஏற்பட்டது.
அவர் ஆடுகளத்தை விட்டு வெளியேறி மருத்துவ உதவி பெற்றுவிட்டு மீண்டும் உள்ளே வந்ததை அனுமதிக்காத ரெஃப்ரீ அவருக்கு மஞ்சள் அட்டை காண்பித்தார். எனினும், இந்தப் போட்டியின் முடிவில் ஃபிரான்ஸ் 1 – 0 என வெற்றி பெற்றதால் இந்த குழப்பங்கள் பெரிய சர்ச்சையாக மாறவில்லை.