சிலாங்கூர் மாநிலத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்த குடும்பங்களின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களில் 38.35 சதவீதம் குறைந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் “பூஜ்ஜிய வறுமை” (Zero Poverty) என்ற இலக்கை மாநிலம் நெருங்கியுள்ளது.
சிலாங்கூர் மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறை செயற்குழு உறுப்பினர் வி. பாப்பாராய்டு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மொத்தம் 2,233 குடும்பத் தலைவர்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 15-ஆம் தேதி நிலவரப்படி 5,822 ஆக இருந்த ஏழைக் குடும்பங்களின் எண்ணிக்கை, பிப்ரவரி 20-ஆம் தேதிக்குள் 3,589-ஆக குறைந்துள்ளது.
எஞ்சியுள்ள 3,589 குடும்பத் தலைவர்களில், 2,102 பேர் உழைக்கும் வயதில் (15-64 வயது) உள்ளவர்கள். இவர்களில் பலர் வேலை செய்தும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வருமானம் ஈட்டுபவர்களாக உள்ளனர். சுமார் 1,487 பேர் முதியவர்கள் மற்றும் 398 பேர் மாற்றுத்திறனாளிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறுமையை ஒழிக்க மாநில அரசு ஒருங்கிணைந்த பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது என்றும், அதில் வறுமை ஒழிப்பு விழிப்புணர்வு (Outreach) மூலம் நேரடி கள ஆய்வுகள் மற்றும் ஒருங்கிணைந்த உதவி மையங்கள் மூலம் ஏழை எளிய மக்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
மேலும் வேலையில்லாத இளைஞர்களுக்குத் தொழில் திறன்களும், வேலைவாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.
இது தவிர ‘மடானி நலத்திட்டம்’ (Madani Welfare Initiative) கீழ் RM2.705 மில்லியன் மற்றும் ‘பிங்காஸ் கூடுதல் திட்டம்’ (Bingkas Tambahan) கீழ் RM5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதன் (ரஹ்மா) மூலம் மக்களின் வாழ்க்கைச் செலவு குறைக்கப்படுகிறது என்று அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.