நடிகர் விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
வெற்றிப் பெற்ற பல படங்கள் கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ள நிலையில், அந்த வரிசையில் விஜய்சேதுபதியின் ‘மகாராஜா’ படமும் சிக்கலில் உள்ளது.
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, அபிராமி உள்ளிட்டப் பலர் நடித்திருந்த திரைப்படம் ‘மகாராஜா’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
ஆனால், இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று பழனியைச் சேர்ந்த ‘கந்தவேல்’ படத்தயாரிப்பாளர் மருதமுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்து குற்றம் சாட்டியிருப்பது தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “பழனி, மானூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். அவர் என்னிடம் ஒரு கதையைக் கூறி இருந்தார். அது நன்றாக இருந்ததால், ரூ. 10 லட்சம் கொடுத்து நான் அதை கடந்த 2020ல் முறைப்படி பதிவு செய்திருந்தேன். ’அத்தியாயம் ஒன்று’ எனத் தலைப்பிடப்பட்ட அந்தக் கதையை குறும்படமாகவும் எடுத்தேன்.
அதன்பின்பு, விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ’மகாராஜா’ படத்தைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. அது ‘அத்தியாயம் ஒன்று’ குறும்படத்தின் கதை. இதுபற்றி விசாரித்தபோது ‘மகாராஜா’ படத்தயாரிப்பாளர்கள் முறைப்படி பதிவு செய்யவில்லை. நான் குறும்படமாக எடுத்து படத்தொகுப்பு செய்யக் கொடுத்த இடத்தில் திருடியிருக்க வாய்ப்புண்டு” எனக் கூறி கோலிவுட்டில் பரபரப்பைக் கூட்டியிருக்கிறார்.