முன்னாள் காதலியின் மூன்று வயது மகனை மிகக் கொடூரமான முறையில் சித்ரவதை செய்து கொலை செய்த 33 வயது ஆடவருக்கு கிள்ளான் உயர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
எஸ். தவேந்திரகுமார் எனும் அந்த நபர், கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள், கிள்ளான் தாமான் செந்தோசாவில் உள்ள ஒரு வீட்டில் வைத்து இந்த அராஜகத்தை அரங்கேற்றியுள்ளார். ரப்பர் குழாய், இடுப்புப் பட்டை மற்றும் துணி மாட்டும் ஹேங்கர் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி அந்தப் பச்சிளம் பாலகனை அவர் மிகக் கொடூரமாகத் தாக்கியது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
இந்த கொடூரம் மூன்று நாட்களாகத் தொடர்ந்த நிலையில், படுகாயமடைந்த அந்தச் சிறுவன் சுயநினைவின்றி உயிரிழந்தான். மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயமாக, இத்தனை கொடுமைகளும் சிறுவனின் தாயின் கண் முன்னாலேயே நடந்துள்ளது விசாரணையில் அம்பலமானது. மகனைக் காப்பாற்றத் தவறிய தாயின் மௌனம் மற்றும் கொலையாளியின் மிருகத்தனமான செயல் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது.
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நோர்லிஸா ஒத்மான் தனது தீர்ப்பில், பாதிக்கப்பட்ட சிறுவன் மிகவும் பலவீனமானவன் என்றும், தற்காத்துக்கொள்ளத் தெரியாத ஒரு குழந்தைக்கு இழைக்கப்பட்ட இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு மரண தண்டனையைத் தவிர வேறு எந்தத் தண்டனையும் ஈடாகாது என்றும் கடுமையாகக் குறிப்பிட்டார். தவேந்திரகுமாரின் தரப்பு வாதங்களை நிராகரித்த நீதிமன்றம், குற்றத்தின் வீரியத்தைக் கருத்தில் கொண்டு இந்த உச்சபட்ச தண்டனையை உறுதி செய்தது.