மியாமி: கோபா அமெரிக்கா தொடரில் பெரு அணிக்கு எதிரான போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வென்று அசத்தியுள்ளது. நட்சத்திர வீரர் மெஸ்ஸி காய்ச்சல் காரணமாக களமிறங்காத போதும், இளம் வீரர் மார்டினஸ் 2 கோல்களை அடித்து வெற்றியை தேடி கொடுத்துள்ளார். இதன் மூலமாக குரூப் ஏ பிரிவில் அர்ஜெண்டினா அணி முதலிடத்தில் நிறைவு செய்துள்ளது.
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் வலிமை வாய்ந்த அர்ஜெண்டினா அணியை எதிர்த்து பெரு அணி மோதியது. இதுவரை இந்த இரு அணிகள் மோதியுள்ள 46 போட்டிகளில் அர்ஜெண்டினா அணி 26 முறையும், பெரு அணி 7 முறையும், 14 முறை டிராவிலும் ஆட்டம் முடிவடைந்துள்ளது. இந்த தொடரில் அர்ஜெண்டினா அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று, ஏற்கனவே காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் தோல்வியை தடுத்து விளையாடினாலே, அர்ஜெண்டினா அணி குரூப் ஏ-வில் முதலிடத்தில் முடிக்க முடியும். காய்ச்சல் காரணமாக இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி விளையாட மாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்பின் முதல் பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில், இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக இருந்தனர்.
மார்டினஸ், டி மரியா அட்டாக்கில் தீவிரமாக இருந்த நிலையில், பெரு அணியின் டிஃபென்சால் முதல் பாதி ஆட்டம் கோல் அடிக்கப்படாமல் முடிவுக்கு வந்தது. இதன்பின் 2ஆம் பாதி தொடங்கிய 2வது நிமிடத்திலேயே பெரு அணியின் டிஃபென்சில் ஏற்பட்ட ஓட்டையை பயன்படுத்தி டி மரியா அசிஸ்ட் கொடுக்க, அதனை நட்சத்திர வீரர் மார்டினஸ் கோலாக மாற்றி அசத்தினார்.
இதன் மூலமாக அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் 70வது நிமிடத்தில் பெரு அணி செய்த தவறு காரணமாக அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் கோல் அடிப்பார் என்று பார்க்கப்பட்ட பரேடஸ், மோசமாக மிஸ் செய்தார். இருந்தாலும் 86வது நிமிடத்தில் மீண்டும் லொட்டாரோ மார்டினஸ் கோல் அடித்து மிரட்டினார்.
இதன் மூலமாக அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. கடைசி வரை பெரு அணி வீரர்கள் எவ்வளவு முயற்சித்தும் எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் முடிவில் அர்ஜெண்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அதேபோல் குரூப் சுற்றில் 3 போட்டிகளிலும் வென்று 9 புள்ளிகளுடன் காலிறுதி சுற்றில் அடியெடுத்து வைத்துள்ளது.