சிப்பாங்:
ஜாலான் புக்கிட் டுகாங்கில் நேற்றுக்காலை 9.10 மணியளவில் லோரி உட்பட 7 வாகனங்கள் மோதிய விபத்தில் 53 மற்றும் 31 வயதுடைய இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
40 வயதான லோ ரி ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது, இதனால் புத்ராஜெயாவிலிருந்து ஜெண்டராம் நோக்கிச் சென்ற லோரி அவரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் பாதையில் சறுக்கிச் சென்றதாக விசாரணையில் தெரியவந்ததாக சிப்பாங் காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் கமாருல் அஸ்ரான் வான் யூசூப் தெரிவித்தார்.
“கட்டுப்பாட்டை இழந்த லோரி பின்னர் நான்கு கார்கள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் ஒட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தது உறுதிசெய்யப்பட்டது, மற்றையவர் புத்ராஜெயா மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்தில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்றிரவு உயிரிழந்தார்” என்று அவர் இரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்நிலையில் லோரி ஓட்டுனரும் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும், அவர் தற்போது புத்ராஜெயா மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் சொன்னார்.
முன்னதாக, குறித்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர மருத்துவ உதவி செய்யும் காட்சியைக் காட்டும் 10 வினாடி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.