கோலாலம்பூர்: சீன சுற்றுப்பயணிகளுக்கு மலேசியா வழங்கும் 30 நாள் விசா விலக்கு வசதியை, சீனாவும் மலேசியர்களுக்கும் வழங்கும் என்று அரசாங்கம் நம்புகிறது என்று வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கூறினார். தற்போது மலேசியர்கள் 15 நாட்களுக்கு விசா இல்லாமல் சீனாவுக்குச் செல்ல அனுமதி அளித்திருக்கிறது என்றார்.
இது பரஸ்பர அடிப்படையில் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்கிறோம். நாங்கள் 30 நாட்கள் வழங்குவதால், சீனாவும் 30 நாட்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மலேசியர்கள் அந்நாட்டிற்குச் சென்று அங்குள்ள மக்களுடன், குறிப்பாக வணிகத்திற்காகப் பயணிப்பவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதை இது எளிதாக்குகிறது என்று அவர் இன்று திவான் நெகாராவில் வாய்மொழி கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.
மலேசியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மக்களுக்கும் மக்களுக்கும் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிய விரும்பிய செனட்டர் பேராசிரியர் எமரிட்டஸ் டத்தோஸ்ரீ டாக்டர் அவாங் ஷாரியனின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி அமலுக்கு வந்த விசா தாராளமயமாக்கல் திட்டத்தின் (PLV) மூலம் மலேசியா சீன மற்றும் இந்திய குடிமக்களுக்கு 30 நாட்களுக்கு விசா விலக்கு அளித்தது.