கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியில் கடுமையான நிலச்சரிவுகளில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மலேசிய நேரம் இரவு 9 மணி நிலவரப்படி அந்தச் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 106 ஆகவும் காணாமற்போனோரின் எண்ணிக்கை 98 ஆக இருந்தது.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணி வரை நான்கு மணி நேரத்தில் மூன்று பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் கிராமங்களும் சாலைகளும் மண்ணுக்குள் புதைந்தன.
வயநாடு மாவட்டத்தின் சூரல்மலா மற்றும் முண்டக்கை நகரப் பகுதியில் பாலங்கள் உடைந்து விழுந்துவிட்டன. உயிரிழந்த பலரது உடல்கள் சாலியார் ஆற்றில் மிதந்து சென்றதாக ஊடகச் செய்திகள் கூறின. அங்கு ஒரேநாளில் 300 மில்லி மீட்டர் அளவு மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து நிலச்சரிவுகளும் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
இந்த ஆண்டும் கனமழை அதிகமாக பெய்துவரும் வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி, முண்டக்கை நகர், சூரல்மலா ஆகிய பகுதிகளில் கடும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.
முண்டக்கை நகர்ப் பகுதியில் மட்டும் இரு முறை நிலச்சரிவுகள் ஏற்பட்டு பெரும் பாதிப்புக்கு மக்கள் ஆளாகியதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதேபோல சூரல்மலா கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் சிக்கிச் சிதையுண்டதாக அப்பகுதி மக்கள் கூறினர்.