புதுடெல்லி: பதவி விலகிய முன்னாள் பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா தமது முதல் அறிக்கையில் வெளிநாட்டு நெருக்குதல்களும், தான் கூறியது திரித்துக் கூறப்பட்டதாலும் தாம் பதவி விலக நேர்ந்ததாகக் கூறியுள்ளார். முன்னாள் பங்ளாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகி இந்தியாவில் புகலிடம் தேடிச் சென்றதை அடுத்து தமது முதல் அறிக்கையில், தான் பதவி விலகியதில் அமெரிக்க சதி இருந்ததாக சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
வன்முறை தொடர்வதை பார்க்க விரும்பாததால் நான் பதவி விலகினேன். அவர்கள் இறந்த மாணவர்களின் உடல்களைக் காட்டி அதிகாரத்தை கைப்பற்ற நினைத்தனர். ஆனால், அது நடக்க விடாமல் நான் தடுத்தேன் என்று கூறினார் ஷேக் ஹசினா. செயிண்ட் மார்டின் தீவை விட்டுக்கொடுப்பதுடன் வங்காள விரிகுடாவில் அமெரிக்கா அதிகாரம் செலுத்த நான் அனுமதித்திருந்தால் பதவியில் நீடித்திருக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
எனது நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து தீவிரவாதிகளின் சதி வலையில் வீழ்ந்துவிடாதீர்கள் என்று அவர் தமது நாட்டு மக்களை கேட்டுக்கொண்டார். பங்ளாதேஷின் சில பகுதிகளைப் பிரித்து அவற்றை மியன்மாரின் சில பகுதிகளுடன் இணைத்து, கிழக்கு தீமோரில் நடந்ததைப்போல், கிறிஸ்துவ நாடு ஒன்றை உருவாக்க சதி நடப்பதாக கடந்த மே மாதம் ஷேக் ஹசினா கூறியிருந்தார்.
வெளிநாடு ஒன்று பங்ளாதேஷில் விமானத் தளம் அமைக்க அனுமதி வழங்கினால் தாம் தேர்தலில் எளிதில் வெற்றி பெற ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் தமக்கு ஆசை காட்டப்பட்டதாக கூறினார். எனினும், இதில் அவர் அந்த நாட்டின் பெயரைக் குறிப்பிடவில்லை.