வின்ஹெடோ:
பிரேசிலின் சாவ் பாவ்லோ மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த விமான விபத்தில் அதிலிருந்த 61 பேரும் கொல்லப்பட்டனர்.
இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட டர்போ விமானம் தெற்கு மாநிலமான பரனாவிலிருந்து சாவ் பாவ்லோ நகரின் குவாருல்ஹொஸ் விமானநிலையத்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது. வின்ஹெடோ என்ற சிற்றூரை அடைந்தபோது விமானம் விபத்துக்குள்ளானது என்று வோபாஸ் விமான நிறுவனம் கூறியது.
விமானம் நேராக உயரத்திலிருந்து இறங்குவதையும் விழும்போது சுழன்றதையும் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட சில காணொளிகள் காட்டின.
‘ஏடிஆர் 72-500’ ரக விமானத்தில் 57 பயணிகளும் நான்கு விமானச் சிப்பந்திகளும் இருந்தனர். இவர்களில் ஒருவர்கூட உயிர் பிழைக்கவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா ட சில்வா, பாதிக்கப்பட்ட குடும்பங்கள், நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
சாவ் பாவ்லோ மாநில ஆளுநரான டார்சிசியோ கோமஸ் டெ ஃபிரைடாஸ், மூன்று நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இதற்கிடையே விமானத்தின் குரல் பதிவுப் பெட்டிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதில் விபத்துக்கான காரணம் தெரிய வரும் என நம்பப்படுகிறது. பிரெஞ்சு-இத்தாலிய விமான நிறுவனமான ‘ஏடிஆர்’ விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.
விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்தது. ஆனால் தரையில் யாரும் காயம் அடையவில்லை.