காசா: பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள பள்ளியில் இஸ்ரேல் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில், 90 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும், கடந்த 10 மாதங்களாக போர் நடந்து வருகிறது. இந்த தாக்குதலில், காசாவில், 39,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில், குழந்தைகள், பெண்கள் அதிகளவில் உயிரிழந்ததாக, காசா சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காசாவின் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருவதை அடுத்து, அங்குள்ள பள்ளிகள் மக்கள் தங்குமிடங்களாக மாறி வருகின்றன.
இந்நிலையில், காசாவில் உள்ள தபீன் என்ற பள்ளியில் நேற்று அதிகாலை இஸ்ரேல் படைகள் சரமாரியாக வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 90 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 47க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதல் நடந்த போது, பள்ளியில் இருந்த மசூதிக்குள் மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
தபீன் பள்ளியில் தாக்குதல் நடத்தியதை ஒப்புக் கொண்ட இஸ்ரேல், அந்தப் பள்ளியில், ஹமாஸ் பயங்கரவாதிகளின் கட்டளை மையம் செயல்பட்டதாக கிடைத்த தகவலின்படி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது.
இதை திட்டவட்டமாக மறுத்த ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, பள்ளியில் கட்டளை மையம் செயல்படவில்லை என்றும், அப்பாவி பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளது.