Offline
மலேசியாவில் சிங்கப்பூரர் ஒருவர் கைது; போதைப்பொருள் கும்பலின் தலைவனாக இருக்கலாம் என ஐயம்
News
Published on 08/14/2024

சிங்கப்பூரர் தலைமையில் செயல்பட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் கும்பலை காவல்துறை முறியடித்துள்ளது.

அதன் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 21.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

கோலாலம்பூரின் தெற்கிலுள்ள தாமான் டேசா பெட்டாலிங்கில் கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) அந்த 64 வயது சிங்கப்பூர் ஆடவரும் 48 வயது மலேசிய ஆடவர் ஒருவரும் பிடிபட்டனர்.

அங்குள்ள பாரம்பரிய மருந்துக் கடையில் பிற்பகல் 2 மணியளவில் சோதனை நடத்தப்பட்டதாக மலேசியக் காவல்துறையின் குற்றப் புலனாய்வுப் பிரிவு இயக்குநர் கோ கொக் சின் கூறினார்.

“அங்கு உள்ளூர்வாசி ஒருவரைக் கைதுசெய்தோம். அங்கிருந்து 209.5 கிலோ எரிமின்-5 மாத்திரைகளைக் கைப்பற்றினோம்.

“அதனைத் தொடர்ந்து, அங்கிருந்து 309 மீட்டர் தொலைவில் சிங்கப்பூரைச் சேர்ந்த சந்தேகப் பேர்வழியையும் கைதுசெய்தோம். அவரது காரிலிருந்து 5.5 கிலோ எக்ஸ்டசி மாத்திரைகள் சிக்கின,” என்று புக்கிட் அமான் காவல்துறை தலைமையகத்தில் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கோ தெரிவித்தார்.

மேல்விசாரணையில், அந்தப் போதைப்பொருள் கும்பலின் தலைவராகக் கருதப்படுபவரின் மகள் பெயரில் அம்மருந்துக் கடை செயல்பட்டதாக அவர் கூறினார்.

பிடிபட்ட போதைப்பொருள்கள் 1.1 மில்லியன் போதைப் புழங்கிகளுக்குப் போதுமானவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து அக்கும்பல் இயங்கி வந்ததாகவும் அவர் சொன்னார்.

“உள்ளூர்ச் சந்தையில், குறிப்பாக கிள்ளான் பள்ளத்தாக்கில் புழக்கத்தில்விட அவர்கள் வெளிநாட்டிலிருந்து போதைப்பொருள்களைப் பெற்றதாக நம்புகிறோம்,” என்றும் கோ கூறினார்.

“கைதான இருவருக்கும் எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை. அந்தச் சிங்கப்பூரர் முன்னர் பிடிபட்டபோதும் அவர்மீது வழக்கு தொடரப்படவில்லை. அவரது கடப்பிதழ் காலாவதியாகிவிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது,” என்று அவர் தெரிவித்தார்.

சந்தேகப் பேர்வழிகளின் கார்கள், 59,000 ரிங்கிட் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

தலைமறைவாக உள்ள போதைப்பொருள் கும்பலின் மற்ற உறுப்பினர்களைக் கண்டறிந்து கைதுசெய்யும் பணியைத் தொடர்ந்து மேற்கொள்வோம் என்றும் ஆணையர் கோ தெரிவித்துள்ளார்.

 

Comments