ஆகஸ்டு… சுதந்திர மணம் வீசும் மாதம் ஆகும். ஆண்டு முழுவதும் சுதந்திர நாள் சுவாசிக்கப்பட்டாலும் நாடு சுதந்திரம் பெற்ற தனித்துவம் மிக்க மாதமாக ஆகஸ்டு மாதம் திகழ்கிறது.
இந்த சுதந்திர மாதத்தில் பல இன மக்களிடையிலான ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்துவதற்கு பல்வேறு நிகழ்ச்சிகள், படைப்புக்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில் ஓர் இடைநிலை பள்ளியில் மலாய் தன்முனைப்பு பேச்சாளர் ஒருவர் பல இன மாணவர்கள் தனித் தனியாக இருக்காமல் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியம் பற்றி ஆக்கப்பூர்வமான கருத்துக்களை முன்வைத்தார்.
தனித்தனி தீவாக இருக்க வேண்டாம். மலாய் மாணவர்கள் ஒரு பக்கமும் சீன மாணவர்கள் இன்னொரு பக்கமும் இந்திய மாணவர்கள் தனித்தும் இலையில் ஒட்டாத நீராக இருப்பதும் மிகப் பெரிய வேதனை.
நாம் அனைவரும் மலேசிய அன்னையின் பிள்ளைகள். நமக்கு இடையே வேற்றுமைகள் வேண் டாம். மலேசியப் பிள்ளைகளாக இன வேறுபாடுகளை தகர்த்தெரிந்து கரம் சேர்வோம் என்று அவர் கூறியதை ஆமோதிப்பது போல் மாணவர்களின் கரவொலி பலமாக ஒலித்தது.