Offline
செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்; புதிய ஆதாரத்தை காட்டும் நாசா
News
Published on 08/14/2024

வாஷிங்டன்:

செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பிற்கு அடியில் திரவ வடிவில் தண்ணீர் உள்ளது என நாசாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பூமிக்கு அப்பால் வேற்று கிரகங்களில் மனிதர்கள் வாழ்வது குறித்து விஞ்ஞானிகள் நீண்ட காலம் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவின் நாசா, செவ்வாய் கிரகத்திற்கு இன்சைட்ஸ் லாண்டர் என்ற விண்கலத்தை அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. இதன் பணிக்காலம் 2022 டிச., மாதத்துடன் நிறைவு பெற்றது.

இருப்பினும் அந்த விண்கலமானது , அங்கு சீஸ்மிக் அலைகளை ஆய்வு செய்து வருகிறது. செவ்வாய் கிரகத்தில் 1,319 பூகம்பம் ஏற்பட்டதை பதிவு செய்துள்ளது. சீஸ்மிக் அலைகளின் வேகத்தை வைத்து, பூமிக்கு அடியில் பல வளங்கள் இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர்.

முன்பு நடந்த ஆய்வில் அந்த கிரகத்தில் உறைந்த நிலையிலும், அதன் வளிமண்டலத்தில் நீராவி இருந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், புதிய ஆய்வில் செவ்வாய் கிரகத்தின் அடிப்பகுதியில் திரவ வடிவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

முந்தைய காலங்களில் செவ்வாய் கிரகத்தில் ஆறுகள் மற்றும் ஏரிகள் இருந்தன என்பதை நிரூபிக்கும் நீர் தடங்கள் இருந்துள்ளது. ஆனால், அங்கிருந்த வளிமண்டலம் பறிபோனதால், அங்கு இருந்த தண்ணீர் அனைத்தும் ஆவியாகி 300 கோடி ஆண்டுகளாக செவ்வாய் கிரகம் பாலைவனமாக உள்ளது.

இது தொடர்பாக கலிபோர்னியா பல்கலை பேராசிரியர் மைக்கேல் மங்கா கூறுகையில், ‛‛ ஒரு கிரகத்தின் பரிமாணத்தை வடிவமைப்பதில் நீர் முக்கியமான மூலக்கூறு. செவ்வாய் கிரகத்தில் இருந்த நீர் எங்கே போனது என்பதற்கு தற்போதைய ஆய்வு பதிலளிக்கிறது. பூமியில் நிலத்தடியில் நீர் இருக்கும்போது, செவ்வாய் கிரகத்திலும் அப்படி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உயிரினங்கள் வாழ்வதற்கு நீர் இன்றியமையாததாக உள்ளதால், தற்போதைய கண்டுபிடிப்பானது. புதிய நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் புதிய கண்டுபிடிப்பு மூலம், அதன் காலநிலை , வெளிப்புர மேற்பரப்பு மற்றும் அதன் உட்புறத்தின் பரிணாம வளர்ச்சியை புரிந்து கொள்ள முடியும்.

Comments