Offline
குளத்தை ஆக்கிரமித்த நடிகர் நாகார்ஜுனா; மண்டபத்தை இடித்து தள்ளிய அதிகாரிகள்
News
Published on 08/24/2024

ஹைதராபாத்:

தெலங்கானாவில் குளத்தை ஆக்கிரமித்து நடிகர் நாகார்ஜுனா கட்டிய மண்டபத்தை அதிகாரிகள் இடித்து அகற்றினர்.

நீர்நிலைகள், அரசு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை தெலங்கானா அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. கடந்த 44 ஆண்டுகளாக ஹைதராபாத்தை சுற்றியுள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளின் விபரங்களை செயற்கைக் கோள் வாயிலாக அறிந்து, அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 56 குளங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. அதில், மாதப்பூரில் உள்ள தும்மிடிகுண்டா குளத்தின் பகுதியை பிரபல நடிகர் நாகார்ஜுனா ஆக்கிரமித்து பிரமாண்ட கட்டடம் கட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த அரங்கில் தான், 2015ல் தற்போதைய தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் மகளின் திருமண நிச்சயதார்த்தம், நடிகர்கள் வருண் தேஜ், லாவண்யா தம்பதி திருமண வரவேற்பு விழா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் குடும்ப நிகழ்வுகள் நடந்தன. சினிமா சூட்டிங்கும் நடக்கிறது.

மொத்தம் 29.24 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த அரங்கில் 10 ஏக்கருக்கு கட்டடங்கள் மட்டுமே உள்ளன. அதில், 3.12 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது 2014ம் ஆண்டே உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாகார்ஜுனாவுக்கு சொந்தமான கட்டடத்தின் ஆக்கிரமிப்புகளை ஹைதராபாத் பேரிடர் மீட்பு மற்றும் சொத்து பாதுகாப்பு நிறுவனம் இன்று காலை இடித்து அகற்றியது. பெரிய ராட்சத இயந்திரங்களுடன் சென்ற அதிகாரிகள், அரங்கின் 35 சதவீத கட்டுமானங்களை இடித்து தள்ளினர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது

Comments