புதுடில்லி:
ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டி.ஜி.ஏ) ரூ.98 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
போதுமான பணியாளர்கள் இல்லாமல் விமானங்களை இயக்கியதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபகாலமாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு பிரச்சனை வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு, லண்டனில் ஓட்டல் அறையில் ஏர் இந்தியாவில் பணியாற்றும் பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
நேற்று மும்பையில் இருந்து 135 பயணிகளுடன் திருவனந்தபுரம் வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
பதறி போன, அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கி பயணிகளை வெளியேற்றப்பட்டனர். சோதனையில் அது புரளி என வெட்ட வெளிச்சம் ஆகியது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 23) ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனம் போதுமான பணியாளர்கள் இல்லாமல் விமானங்களை இயக்கியதற்காக, விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.98 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
ஏர் இந்தியாவின் இயக்குனருக்கு ரூ.6 லட்சமும், பயிற்சி இயக்குனருக்கு ரூ.3 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தினமும் பிரச்னைகள் வரிசை கட்டிதான் இருக்கும் என சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.