தொழிலாளர்கள் தங்கள் பணி நேரம் முடிந்து வீட்டிற்கு சென்றபிறகு, சில சமயங்களில் மேலதிகாரிகள் தொடர்பு கொண்டு வேலை தொடர்பான தகவல்களைக் கேட்பது உண்டு. சில சமயங்களில் மீண்டும் அலுவலகம் வந்து அவர்கள் கேட்கும் தகவல்களை வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதேபோல் வார விடுமுறை நாட்களிலும் நிறுவனம் அழைத்தால் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.
அப்படிப்பட்ட சூழ்நிலையை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் வீட்டிற்குச் சென்றபிறகும் அலுவலகத்தைப் பற்றியே சிந்திக்க வேண்டிய நிலை உள்ளது. வேலை இல்லாத நேரத்தில் அமைதியாக பொழுதை கழிக்கவோ, குடும்பத்தினருடன் நேரம் செலவிடவோ முடிவதில்லை.
இந்தக் குறையை போக்கும் வகையிலும், தொழிலாளர்களுக்கு உரிமை வழங்கும் வகையிலும் பிரான்ஸ், ஸ்பெயின் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன. அதாவது, வேலை நேரம் முடிந்தபின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டால் அழைப்பை துண்டிக்கும் உரிமையை இந்தச் சட்டம் வழங்குகிறது.
மத்திய-இடது தொழிலாளர் கட்சியின் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட தொழில்துறை உறவுகள் சட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக இந்தச் சட்டத்திருத்தம் பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய பசுமை கட்சி மற்றும் சுயேட்சை செனட்டர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்த புதிய சட்டத்திருத்தம் இந்த ஆண்டு தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்டது.
அலுவலக நேரத்திற்கு பிறகு தொழிலாளர்களை தொடர்புகொள்ளும்போது, நியாயமற்ற காரணமாக இருந்தால் அந்த அழைப்பை நிராகரிக்கலாம். நியாயமான காரணமாக இருந்தால் அழைப்புக்கு பதில் அளிக்கலாம் அல்லது தொடர்பு கொள்ளலாம். இது தொடர்பாக ஏதேனும் பிரச்சனை எழுந்தால் ஆஸ்திரேலியாவின் நியாய வேலை ஆணையத்திடம் முறையிட்டு, இறுதி முடிவு எடுக்கலாம் என பசுமை கட்சி முன்மொழிந்துள்ளது.
இந்நிலையில், வேலை நேரம் முடிந்தபின் தொழிலாளர்களை நிறுவனம் தொடர்பு கொண்டால் அழைப்பை துண்டிக்கும் உரிமை சட்டம் வரும் 26-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது என ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.