Offline
முகமூடி அணிந்த ஆடவர்களால் இளைஞர் வெட்டிக்கொலை, தம்பி படுகாயம்- நான்காவது சந்தேகப் பேர்வழி தடுத்து வைப்பு
Published on 08/28/2024 01:21
News

மலாக்கா, ஜாசினில் தாமான் ரிம் பாரு என்ற இடத்தில் முடி திருத்தும் கடை ஒன்றுக்கு முன்புறத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.39 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது.

பலத்த காயமுற்ற அந்நபர் தன் 22 வயது தம்பியை தொடர்புக்கொண்டு தன்னை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார் என்று ஜாசின் ஓசிபிடி டிஎஸ்பி அமாட் ஜமில் ரட்ஸி கூறினார்.

இச்சம்பவத்தை போலீஸ் கொலை என வகைப்படுத்தி இருக்கிறது.

கும்பலால் வெட்டி சாய்க்கப்பட்ட அண்ணனை ஜாசின் மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தம்பி காரில் திரும்புகையில் அவரையும் ஒரு கும்பல் தாக்கியது. இதில் அந்த 22 வயது இளைஞர் படுகாயமடைந்தார்.

அக்கும்பலிடமிருந்து தப்பிக்கும் சமயத்தில் எதிரே வந்த ஆம்புலன்ஸ் மீது அவர் கார் மோதியது. எனினும் காயங்களுடனேயே தம்பி காவல்துறையில் புகார் செய்தார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அண்ணன் இரவு 10.15 மணியளவில் உயிரிழந்தார். காவல் துறையினரின் அதிரடியில் 21 முதல் 31 வயதுக்குட்பட்ட மூன்று ஆடவர்கள் இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டனர்.

நான்காவது சந்தேகப் பேர்வழி ஆகஸ்டு 25 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இவரை இன்று ஆகஸ்டு 27 தொடங்கி ஒரு வாரத்திற்கு போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்படுவதற்கு மாஜிஸ்திரேட் மஸானா சினின் அனுமதி வழங்கினார்.

 

Comments