Offline
விஜயலெட்சுமி புதைந்த இடத்தில் குடும்பத்தினர் பிரார்த்தனை; ஒரு பிடி மண்ணுடன் தாயகம் திரும்பினர்
News
Published on 09/02/2024

கோலாலம்பூர், ஜாலான் மஸ்ஜிட் இந்தியா மலேயன் மேன்சன் நடைபாதையில் திடீரென ஏற்பட்ட நில அமிழ்வில் ஆந்திரா, குப்பம் பகுதியை சேர்ந்த 48 வயது ஜி.விஜயலெட்சுமி செங்குத்தாக விழுந்து புதைந்தார்.

கடந்த ஆகஸ்டு 23 ஆம் தேதி காலை 8.20 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தகவல் கிடைக்கப்பெற்ற 7ஆவது நிமிடத்தில் தீயணைப்பு, மீட்பு இலாகா தேடல், மீட்பு பணியை உடனடியாக தொடங்கியது.

ஆகஸ்டு 31 ஆம் தேதி மதியம் வரை மேற்கொள்ளப்பட்ட தேடல், மீட்பு பணிகள் பலன் தராததால் அப்பணிகளை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக நிறுத்துகிறது என்று கூட்டரசு பிரதேச அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தபா அறிவித்தார்.

விஜயலெட்சுமி புதைந்த இடத்திற்கு இன்று காலை வந்த அவரின் கணவர், மகன் எம்.சூர்யா, விஜயலெட்சுமியின் தங்கை ஆகிய மூவரும் சமய சடங்குகளை நடத்தினர்.

விளக்கேற்றி, மணி அடித்து சடங்கை முடித்தனர். வீட்டிற்கு எடுத்து செல்வதற்காக அவர் விழுந்து புதைந்த இடத்தில் இருந்து ஒரு பிடி மண்ணையும் எடுத்துக்கொண்டனர்.

அப்போது அவர்களின் கண்களில் இருந்து கண்ணீர் பொல பொலவென கொட்டியது. அங்கு திரண்டிருந்தவர்களின் இதயங்களை கசக்கிப் பிழிவதாக இருந்தது.

கணவர், மகன், தங்கை ஆகிய மூவரும் இன்று மாலை தாயகம் திரும்பினர்.

விஜயலெட்சுமி இல்லாமல் அவரின் நினைவாக ஒரு பிடி மண்ணுடன் இம்மூவரும் விமானத்தில் ஏறினர்.

இங்கு தங்கி இருந்த காலத்தில் இவர்கள் முழு போலீஸ் பாதுகாப்பில் இருந்தனர். இன்று சடங்கு செய்தபோது போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது.

 

Comments