Offline
67ஆவது தேசிய தினம் : நாட்டின் கலாச்சாரம், பன்முகத்தன்மை, ஒற்றுமை உணர்வின் வெளிப்பாடு
News
Published on 09/02/2024

கோலாலம்பூர்:

புத்ராஜெயா – நாட்டின் இனம், கலாச்சாரம், மத நம்பிக்கையின் ஒற்றுமை, பன்முகத்தன்மை என அனைத்தும் நமக்கு கிடைத்துள்ள பலம் என்பதை தொடர்புத்துறை துணையமைச்சார் தியோ நீ சிங் சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆகஸ்டு 31 ஆம் தேதி சனிக்கிழமை புத்ராஜெயா சதுகத்தில் நடைபெற்ற 67ஆவது தேசிய தின கொண்டாட்டத்தில், ஒவ்வொரு கலாச்சாரத்தின் தனித்துவத்தை மிகச் சிறந்த முறையில் காண முடிந்தது.

“நாட்டின் தேசிய தின அணிவகுப்பின் வரலாற்றில் முதன்முறையாக, மடானி மலேசிய சமூகக் குழு மிகப்பெரிய அணியாக இருந்தது. மலேசிய சமூகத்தின் கலாச்சாரம், பன்முகத்தன்மையை குறிக்கும் வகையில் பங்கேற்பாளர்கள் தங்கள் பாரம்பரிய உடையில் வந்திருந்தனர்.

மலாய், சீனம், இந்தியர், சபா, சரவாக், ஓராங் அஸ்லி, பாபா ஞோன்யா, செட்டிகள், சயாமியர் சமூகங்களைப் பிரதிநிதித்து 779 பேர் கலந்து கொண்டது சிறப்பம்சமாக அமைந்தது என்று அவர் கூறினார்.

இவ்வாண்டு தேசிய தின விழாவில் மலேசிய இந்திய பாரம்பரிய இசைக் குழுவை பங்கேற்கச் செய்ய தாம் பரிந்துரைத்ததாகவும், கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ தெரிவித்தார்.

“உருமி மேள இசையுடன், பங்கரா இசைக் கலைஞர்களையும் இந்த அணிவகுப்பில் பார்த்தோம். இதில், மயிலாட்டம், கோலாட்டம் படைப்புகளும் அனைவரின் கவனத்தை ஈர்த்ததோடு, ‘ஊழலை கழுவுவோம்’ படைப்பில் இடம்பெற்ற நம் நாட்டுக் கலைஞர் ஸிபிர் கானின் “என்னோட மச்சா” எனும் உள்ளூர் தமிழ்ப் பாடல், ஒட்டுமொத்த மலேசியர்களின் பார்வை ஈர்த்தது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

“இதன் வெளிப்பாடு மலேசியர்களின் ஒற்றுமை, அடையாளம், தேசபக்தியின் உணர்வை இன்னும் வலுப்படுத்த முடியும் என நான் நம்புகிறேன்.

எதிர்காலத்தில் தலைவர்களாக வரப்போகும் நமது இந்திய இளைஞர்கள் உட்பட ஒவ்வொருவரும் இந்த உணர்வோடு முழு அர்ப்பணிப்புடன் இருப்பார்கள் என்பது எனது நம்பிக்கை,” என்றார் அவர்.

கடந்த வெள்ளிக்கிழமை புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பிரதமரின் 2024-ஆம் ஆண்டுக்கான தேசிய தின சிறப்பு உரையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சிறுவன் சாய் ராகேஷ் விஜயனிடம் ஜாலூர் ஜெமிலாங்கை ஒப்படைத்தது இளைய தலைமுறை ஆற்ற வேண்டிய பொறுப்புகளின் அடையாளமாக வெளிப்பட்டது என்று துணை அமைச்சர் குறிப்பிட்டார்.

மலேசியா மடானி கொள்கைக்கு ஏற்ப, தேசத்திற்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து எதிர்மறையான கூறுகளையும் நிராகரிப்பதன் வழி இளைய தலைமுறை புதிய சக்தியாக உருமாறும் என தியோ நம்பிக்கை தெரிவித்தார்.

Comments