சோல்: தென்கொரிய தலைநகர் சோலில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஆழ்குழி தோன்றியது. அதில் இருவர் சென்றுகொண்டிருந்த ஒரு கார் வீழ்ந்தது. இதில் இருவரும் காயமடைந்த நிலையில் ஒருவர் கடுமையாகக் காயமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. சோல் பெருநகர சாலை, காவல் பிரிவு அங்குள்ள இரண்டு சாலைத் தடங்களிலும் போக்குவரத்தை ஆகஸ்ட் 30ஆம் தேதி காலை 8.30 மணி முதல் ஒழுங்குபடுத்தி வருவதாக கூறப்படுகிறது. சாலையில் விரிசல் ஏற்பட்ட இடம் ஆழ்குழி விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து 30 மீட்டர் தூரத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆழ்குழி ஏற்பட்டதற்கான காரணம் குறித்து நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம் என்று கூறிய அந்த மாவட்ட அதிகாரி ஒருவர், அந்த சாலையை இரவில் கண்காணித்து வந்த அதிகாரிகள் காலை சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்தபோது சாலை உள்வாங்கியதை கண்டனர் என்றார். ஆகஸ்ட் 29ஆம் தேதி காலை சுமார் 11.25 மணிக்கு தென்கொரிய தலைநகர் சோலில் இருவர் இருந்த வாகனம் பக்கவாட்டில் உருண்டவாறு சோல் நகர வடமேற்குப் பகுதியில் உள்ள ஆழ்குழியில் வீழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆழ்குழி 6 மீட்டர் அகலம், 4 மீட்டர் நீளம், 2.5 மீட்டர் ஆழம் என்று தெரிவிக்கப்படுகிறது.
அந்த காரை ஓட்டிய 80 வயதுக்குமேல் மதிக்கத்தக்க ஆடவர் கடுமையாக காயமடைந்துள்ளதாகவும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. காரில் பயணம் செய்த 70 வயதுக்குமேல் மதிக்கத்தக்க மாதுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவருக்கு இதயத் துடிப்பு மீட்பு சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.