Offline
Menu
மராட்டியத்தில் சிவாஜி சிலை உடைந்த வழக்கு: சிற்பி கைது
Published on 09/06/2024 02:12
News

மராட்டிய மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் 4ம் தேதி மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சிலை  நிறுவப்பட்டு 8 மாதங்களே ஆன நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி சிலை இடிந்து விழுந்தது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாகக் குற்றம் சாட்டின. இந்த சம்பவம் தொடர்பாக சிந்துதுர்க்கில் உள்ள மால்வன் போலீஸ் நிலையத்தில் சிற்பி, கட்டிட பொறியாளர் சேதன் பட்டீல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சிற்பி தலைமறைவானார். மேலும் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த சிலையை வடிவமைத்த கட்டிட பொறியாளர் சேதன் பட்டீல் என்பவரை போலீசார் கடந்த மாதம் 31ம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து சிலையை வடிவமைத்த சிற்பியை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், தேடப்பட்டு வந்த சிற்பி ஜெய்தீப் ஆப்தே தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் நகரில் வைத்து போலீசார் இன்று கைது செய்துள்ளனர். ஜெய்தீப் தானேவில் இருந்து சிந்துதுர்க்கு அழைத்து செல்லப்பட்டு, பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என்று சிந்துதுர்க் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்

Comments