புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சிங்கப்பூர்ப் பயணம் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. மோடி, செப்டம்பர் 4, 5ஆம் தேதிகளில் சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்வார் என்று அது குறிப்பிட்டது.
இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான உறவுகளில் முற்றிலும் புதிய நிலையிலான ஒத்துழைப்பு ஏற்படவிருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சு சொன்னது. இரு நாடுகளும் பகுதி மின்கடத்தித் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்த விரும்புவதாக அமைச்சின் செயலாளர் (கிழக்கு) ஜெய்தீப் மஜும்தார் கூறினார். பிரதமரின் சிங்கப்பூர்ப் பயணம் வர்த்தகம், முதலீடு தொடர்பில் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார் அவர்.
“சிங்கப்பூர், ஆசியானில் இந்தியாவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் உலக அளவில் ஆறாவது ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் விளங்குகிறது. அந்நிய நேரடி முதலீட்டிலும் அது முன்னிலை வகிக்கிறது என்று கூறிய அவர், 2023ஆம் ஆண்டில் சிங்கப்பூர் 11.77 பில்லியன் டாலர் முதலீடு செய்ததாகக் கூறினார். மோடி தமது பயணத்தின்போது நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரிகளைச் சந்திப்பார் என்றும் கூறப்பட்டது.
இரண்டு வாரங்களுக்குமுன் இரு தரப்பு அமைச்சர்கள் கலந்துகொண்ட வட்டமேசைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், பிரதமர் மோடி சிங்கப்பூர் வரவுள்ளார். அந்தக் கூட்டத்தில் ஒத்துழைப்புக்கான பல்வேறு துறைகள் அடையாளம் காணப்பட்டன. மின்னிலக்கமயமாதல், திறன்கள், சுகாதாரம், நீடித்த நிலைத்தன்மை போன்றவை அவை. அத்துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பில் சில புரிந்துணர்வுக் குறிப்புகள் பிரதமர் மோடியின் பயணத்தின்போது கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.