Offline
கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நடந்தே செல்லும் இந்தியர் எண்ணிக்கை அதிகரிப்பு
News
Published on 09/06/2024

கனடாவிலிருந்து கால்நடையாகவே அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன், கனடா செல்லும் பயணிகள் இங்கிலாந்தில் புகலிடம் கோருவதும் கவனத்துக்குரிய பிரச்சினையாகி உள்ளது.

அண்மைய அமெரிக்க சுங்கத்துறை, எல்லைப் பாதுகாப்பு தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் கனடாவிலிருந்து 5,152 ஆவணமற்ற இந்தியர்கள் கால் நடையாக அமெரிக்காவிற்குள் நுழைந்துள்ளனர். கடந்த 2023 டிசம்பர் முதல் கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் நுழையும் இந்தியர்களின் மாதாந்திர எண்ணிக்கை, மெக்சிகோவிலிருந்து செல்பவர்களைவிட அதிகமாக உள்ளது.

ஏறக்குறைய 9,000 கிலோ மீட்டர் நீளமான அமெரிக்க-கனடா எல்லை உலகின் மிக நீளமான திறந்த எல்லையாகும். இது மெக்சிகோ எல்லையை விட இரு மடங்கு நீளமானது. சீனா- இந்தியாவின் 3,400 கி.மீ. எல்லையின் நீளத்தை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம்.

அமெரிக்க சுங்கத்துறை, எல்லைப் பாதுகாப்புத் தரவுகளின்படி, 2024 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் கனடாவுடனான அமெரிக்க எல்லையில் பிடிபட்ட இந்தியர்களின் சராசரி மாதாந்திர எண்ணிக்கை 47% அதிகரித்துள்ளது. 2023ன் 2,548 என்ற எண்ணிக்கையிலிருந்து 3,733 ஆக அதிகரித்துள்ளது. 2021ன் 282 ஆக இருந்த எண்ணிக்கையை விட 13 மடங்கு அதிகமாகும்.

அமெரிக்காவில் சட்டபூர்வமாக குடியேறிய இந்திய மக்களின் அதிகரித்து வரும் பொருளாதார செல்வாக்கும் அவர்களின் மொத்த எண்ணிக்கைக்குமான மாறுபட்ட நிலையில் இந்த எண்ணிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணமாக, பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் அண்மைய ஆய்வின்படி, அமெரிக்க மக்கள் தொகையில் இந்திய அமெரிக்கர்கள் 1.5%. ஆனால் அனைத்து வருமான வரிகளிலும் 5-6 விழுக்காட்டை அவர்கள் செலுத்துகின்றனர்.

இதற்கிடையே, 2021ல் 495 ஆக இருந்த இங்கிலாந்தில் தஞ்சம் கோரும் இந்தியர்கள் எண்ணிக்கை 2022ல் 136% அதிகரித்து 1,170 ஆனது. 2023ல் அது 1,319 உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு, ஜூன் வரை 475 புகலிடக் கோரிக்கையாளர்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்க அளவினர், இங்கிலாந்தை நிறுத்தமிடமாக கொண்டு, கனடாவிற்கு பயணிப்பவர்கள் என அறியப்படுகிறது. இது குறித்து கனடாவிடம் அமெரிக்காவும் இங்கிலாந்தும் கவலை தெரிவித்துள்ளன. விசா நடைமுறைகளை அமெரிக்கா மிகவும் கடுமையாக்கியுள்ள நிலையில், கனடாவுக்குச் செல்லும் அனைத்து இந்திய மக்களும் இடைநிறுத்த நாடுகளுக்கும் விசா பெற வேண்டும் என்று இங்கிலாந்து முன்மொழிந்துள்ளதாக அறியப்படுகிறது.

Comments