Offline
நண்பனின் அடையாளத்தில் 15 ஆண்டுகள் வேலை செய்து மோசடி
News
Published on 09/09/2024

போபால்: நண்பனின் அடையாளத்தைப் பயன்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 15 ஆண்டுகளாக வேலை செய்த ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. தருண் ஜின்ராஜ் எனப்படும் அந்த ஆடவர் தமது மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டையும் எதிர்நோக்குகிறார்.

பிரவீன் பாட்டலே எனப்படுபவர் தருண் ஜின்ராஜின் நண்பர். மோசடிக் குற்றத்திற்காக தாம் கைது செய்யப்பட்டதாக 2018ஆம் ஆண்டு செய்தி வந்ததைப் படித்த பிரவீன் அதிர்ச்சி அடைந்தார். அதுகுறித்து காவல்துறையில் புகார் செய்தார். பிரவீனின் அடையாளங்களை ஜின்ராஜ் 2003ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தியது அப்போது அம்பலமானது.

வழக்கு விசாணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது போபால் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தருணுக்கு ஏழாண்டு சிறைத் தண்டனையும் ரூ.11,000 அபராதமும் விதிக்கப்பட்டன. மனைவியைக் கொலை செய்த பின்னர் போபால் சென்ற தருண், தமது நண்பர் பிரவீனிடம் தாம் வேலையிழந்துவிட்டதாக பொய் கூறினார், உதவி செய்யுமாறு அவரிடம் கேட்டார்.

ஜூடோ பயிற்சி மையம் நடத்தி வந்த பிரவீன், லாபப் பகிர்வு அடிப்படையிலான வேலை தரச் சம்மதித்தார். சாப்பாடும் தங்குமிடமும் தருணுக்கு அளித்தார். அப்போது பிரவீனின் ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு, பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றைப் பிரதி எடுத்தார் தருண்.

பிரவீன் என்று தம்மைக் கூறி புனே, பெங்களூரு, நொய்டா போன்ற இடங்களில் வேலை செய்ததுடன் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தார். இரண்டாவது திருமணமும் செய்துகொண்டார் தருண்.

Comments