Offline
இரவில் போராட்டக் களமான கொல்கத்தா.. மருத்துவர் பலாத்கார மரணத்துக்கு நீதி கேட்டு திரண்ட பெண்கள்
News
Published on 09/09/2024

கொல்கத்தா: கொல்கத்தா மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு கொல்கத்தாவில் இன்று மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட ரிக்‌ஷாக்காரர்கள், ரிக்‌ஷாக்களை இழுத்துச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பயிற்சி மருத்துவர் மரணத்திற்கு நீதி கோரி கொல்கத்தாவில் ஞாயிறுதோறும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் காவல் துறைக்கு உதவும் தன்னாா்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.இந்த கொலை வழக்கில் நீதி கோரியும், பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மருத்துவர்களும் பொதுமக்களும் மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறி மருத்துவர்கள் நாடு முழுவதும் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்நிலையில், கொல்கத்தாவில் இன்று நூற்றுக்கணக்கானோர் அணிதிரண்டு மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியுள்ளனர். ஆர். ஜி. கர் மருத்துவமனையைச் சேர்ந்த இளம் மருத்துவர்கள் நூற்றுக்கணக்கானோர் இன்று மாலை மனிதச்சங்கிலிப் போராட்டத்தை தொடங்கினர். தங்கள் கைகளை கோர்த்துக்கொண்டு, தேசியக்கொடியை ஏந்தியபடி அவர்கள் தேசிய கீதத்தை பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மருத்துவ மாணவர்களுடன், எஸ்எஃப்ஐ மற்றும் DYFI அமைப்பைச் சேர்ந்தவர்களும் இணைந்து மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொல்கத்தா மட்டுமன்றி மேற்கு வங்கத்தின் பிற பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது.தெற்கு கொல்கத்தாவில் 40க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் பெண்கள் உட்பட 4,000 பேர், 2 கி.மீ தூரத்துக்கு பேரணியாக நடந்து சென்றனர். பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை உறுதி செய்யப்படுவதுடன், அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

மேலும், கொல்கத்தாவில், 100 ரிக்‌ஷா ஓட்டுநர்கள், ரிக்‌ஷா வண்டிகளை தங்கள் கைகளால் இழுத்தபடி ஊர்வலமாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதிகோரி, கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் பொது இடங்களில் ஆயிரக்கணக்கானோர் அணிதிரண்டு போராட்டம் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

Comments