சிரம்பான்:
சிறார் பராமரிப்பு இல்லத்தில் தன் பொறுப்பில் விடப்பட்ட சிறார்களுக்கு இரும்புக் கரண்டியால் சூடு வைத்த குற்றத்திற்காக 19 வயது இளம்பெண் ஒருவர் மீது சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று 4 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
நீதிபதி டத்தின் சுரித்தா புடின் மியோர் சுலைமான் அமாட் முன்னிலையில் குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டபோது, புத்ரி நூரின் அமாலினா அமாட் டாவுட் என்ற அந்தப் பெண் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார்.
தன் பராமரிப்பில் இருந்த ஐந்து முதல் ஆறு வயது பெண் பிள்ளைகளின் கைகளில் இரும்புக் கரண்டியால் சூடு போட்டு கொடுமைப் படுத்தியதாக அந்தப் பெண் மீது தனித்தனியாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அந்தச் சிறு பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருந்த அந்தப் பெண் அவர்களுக்குச் சூடு வைத்து கொடுமைப் புரிந்தது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. கொப்பளித்து காயம் ஏற்படும் அளவுக்கு அந்தச் சிறு பிள்ளைகளுக்கு சூட்டு காயம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்று குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
சிரம்பான், ராசா , தாமான் மெர்போக் ரியாவில் உள்ள அந்தச் சிறார் பராமரிப்பு காப்பகத்தில் கடந்த ஆகஸ்டு மாத வாக்கில் இப்பெண் இந்தக் குற்றச்செயலைப்புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.