அகமதாபாத்: குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் லக்பத் மற்றும் அப்தாசா தாலுகாக்களில் மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த 3-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 48 பேர் இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் இக்காய்ச்சலால் உயிரிழந்தனர்.
இதையடுத்து மாநில சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் தலைமையில் புஜ் நகரில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்துக்கு பிறகுருஷிகேஷ் படேல் கூறுகையில், “பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 3 சிறப்பு மருத்துவர்களும் எம்பிபிஎஸ் மருத்துவர்கள் தலைமையில் 50 மருத்துவக் குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில்ஜி.கே. பொது மருத்துவமனையில் 100 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. 30 வென்டிலேட்டர்கள் மற்றும் பிற மருத்துவ சாதனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ்களும் ஆங்காங்கே தயார் நிலையில் உள்ளன. இந்த காய்ச்சல் கரோனா தொற்று போல் வேகமாக பரவக் கூடியதாக தோன்றவில்லை” என்றார்.
இந்த காய்ச்சலுக்கு கால்நடை நோய்கள் காரணமாக இருக்கலாம் என்பதை மாநில கால்நடைத்துறை மறுத்துள்ளது. பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் காந்தி நகரில் உள்ள பயோடெக்னாலஜி ஆய்வு மையம் மற்றும் புனே நகரில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் அண்மையில் கனமழை பெய்தது. இந்த மழையால் காய்ச்சல் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.