Offline
வியட்நாம் புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 254 ஆக உயர்வு
News
Published on 09/15/2024

ஹனோய்,பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் சீனாவை தொடர்ந்து வியட்நாமை மிரட்டியது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய கடலோர மாகாணங்களை குறிவைத்து யாகி புயல் வீசியது. மணிக்கு 149 கி.மீ வேகத்தில் காற்று வீசி தலைநகர் ஹனோயில் யாகி புயல் கரையை கடந்தது. வியட்நாமில் இந்த நூற்றாண்டின் மிக பயங்கரமான புயலாக கருதப்படும் இந்த யாகி, அந்த நாட்டை முழுவதுமாக உலுக்கியது.

புயல் வீச்சை தொடர்ந்து அங்கு இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் அங்குள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை காரணமாக அங்குள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் வீடுகள், பள்ளிகள் உள்பட கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை நீரில் தத்தளித்து வருகின்றன. இதையடுத்து, அங்குள்ள மலைப்பாங்கான காவ் பாங் மாகாணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனிடையே அங்கே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த இரும்பு பாலம் ஒன்று இரண்டு துண்டுகளாக உடைந்து ஒரு பகுதி ஆற்றில் மூழ்கியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வியட்நாமில் புயல் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 254 ஆக உயர்ந்ததாக அந்த நாட்டின் பேரிடர் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது. 82 பேரை காணவில்லை. 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். வியட்நாமை தாக்குவதற்கு முன்பு, தெற்கு சீனா மற்றும் பிலிப்பைன்சில் இந்த சூறாவளி புயல் தாக்கியதில் 24 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments