நைஜர்: நைஜீரியா நாட்டில் 70க்கும் மேற்பட்ட விவசாயிகளை ஏற்றி சென்ற மரப்படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 64 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடமேற்கு நைஜீரியாவில் ஜம்பாரா மாநில விவசாயிகள் தங்களுடைய விவசாய பணிகளுக்காக தினந்தோறும் ஆற்றினை கடந்து செல்ல வேண்டும். அந்த வகையில் 70 பேர் படகில் சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் 64 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்து அந்த நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3 மணி நேரம் மீட்பு பணிமீட்புப் படை அதிகாரி அமினு நூஹு கூறியதாவது: 70 விவசாயிகளை ஏற்றிச் சென்ற மரப் படகு ஒன்று, கும்மி நகருக்கு அருகில் உள்ள அவர்களது விவசாய நிலங்களுக்குச் செல்லும் போது விபத்தில் சிக்கியது. மீட்பு பணிகளுக்கு உள்ளூர் மக்கள் உதவினர்.
3மணி நேரமாக போராடி 6 பேரை தான் மீட்க முடிந்தது. 900க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களை அணுகுவதற்கு தினமும் ஆற்றைக் கடந்து தான் ஆக வேண்டும். இரண்டு படகுகள் மட்டுமே இருக்கின்றது. இது பெரும்பாலும் கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் தான், ஜம்பாரா மாநிலம் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரம் முன்ப, வெள்ளத்தால் 10,000க்கும் மேற்பட்ட குடியிருப்போர் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.