Offline
மலேசியாவில் சிறார் பாலியல் துன்புறுத்தல் சர்ச்சை: சம்பந்தப்பட்ட பள்ளிகளை மூட உத்தரவு
News
Published on 09/15/2024

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் சிறுவர்களுக்குப் பாலியல் துன்புறுத்தல் இழைக்கப்பட்டதாக நம்பப்படும் சமயப் பள்ளிகளை சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம் (Mais) மூடவுள்ளது.

சம்பந்தப்பட்ட பள்ளிகள் ஜிஎஸ்ஐபி (Global Ikhwan Services and Business Holdings) குழுமத்தைச் சேர்ந்தவை. அதற்குத் தொடர்புடைய அமைப்புகளை செப்டம்பர் 11ஆம் தேதியன்று காவல்துறை சோதனையிட்டதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது.

ஜிஎஸ்ஐபிக்கும் சிலாங்கூரில் தடை செய்யப்பட்ட அல்-அர்க்கம் (Al-Arqam) குழுவுக்கும் தொடர்பிருப்பது போல் இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளிகளில் தெரிந்தது என்றும் சம்பந்தப்பட்ட பள்ளிகளை மூட உத்தரவிட்டதற்கு அதுவும் காரணம் என்றும் இஸ்லாமிய சமய மன்றத்தின் தலைவர் அப்துல் அஸிஸ் முகம்மது யூசோஃப் தெரிவித்தார்.

“1993ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நான்காம் தேதி, 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி, 2006ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் தேதி ஆகிய நாள்களில் விதிக்கப்பட்ட மூன்று சமயம் சார்ந்த உத்தரவுகளின்கீழ் சிலாங்கூரில் அல்-அர்க்கம் குழுவுக்குத் தடை விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட காணொளிகளில் ஜிஎஸ்ஐபிக்கும் அல்-அர்க்கமின் நடவடிக்கைகளுக்கும் போதனைகளுக்கும் தொடர்பிருப்பதுபோல் தெரிகிறது,” என்று திரு அப்துல் அஸிஸ் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 14) அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார். அந்த மூன்று சமயம் சார்ந்த உத்தரவுகளின்படி அல்-அர்க்கம் குழுவின் நடைமுறைகள், போதனைகள் ஆகியவற்றுக்கு நிகரானவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டது.

ஜிஎஸ்ஐபியுடன் தொடர்புடைய அனைத்து நன்கொடை இல்லங்கள், பள்ளிகளிலும் விசாரணை நடத்துமாறு சிலாங்கூர் இஸ்லாமிய சமயப் பிரிவைச் (Jais) சேர்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக திரு அப்துல் அஸிஸ் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட பள்ளிகள், ஏற்றுக்கொள்ளத் தகாத போதனைகளை வழங்குவது தெரிய வந்தால் சிலாங்கூர் மாநில இஸ்லாமிய சட்டங்களுக்கேற்ப அவற்றின் செயல்பாடுகள் முடக்கப்பட்டு மூடப்படும் என்றும் அவர் கூறினார்.

சிலாங்கூர் மாநில இஸ்லாமிய சட்டங்களுக்குக்கீழ் பாலியல் துன்புறுத்தல் உட்பட எவ்வித துன்புறுத்தல் விவகாரங்களுக்கு எதிராகவும் காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு சிலாங்கூர் சமய அதிகாரிகள் முழு ஆதரவு வழங்குவர் என்றும் திரு அப்துல் அஸிஸ் சொன்னார்.

Comments