Offline
இடைவிடா மழையால் தாஜ்மகாலில் நீர்க்கசிவு; மூழ்கிய தோட்டம்
News
Published on 09/15/2024

ஆக்ரா: கடந்த மூன்று நாள்களாகக் கொட்டித் தீர்த்த மழையால் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலின் முதன்மைக் குவிமாடத்தில் நீர்க்கசிவு ஏற்பட்டது.

அவ்வளாகத்தில் உள்ள தோட்டம் ஒன்றும் நீரில் மூழ்கியுள்ளது. அதுகுறித்த காணொளி இணையத்தில் பரவி, சுற்றுப்பயணிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில், முதன்மைக் குவிமாடத்தில் நீர்க்கசிவு இருந்தாலும் அதனால் எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று இந்தியத் தொல்லியல் துறையின் ஆக்ரா வட்டார உயரதிகாரியான ராஜ்குமார் பட்டேல் தெரிவித்துள்ளார்.

ஆளில்லா வானூர்திமூலம் முதன்மைக் குவிமாடம் ஆராயப்பட்டதாகவும் அவர் சொன்னார்.

இதனிடையே, கடந்த வியாழக்கிழமை வெளியான 20 நொடிக் காணொளி ஒன்று, தாஜ்மகால் வளாகத்தில் உள்ள தோட்டங்களில் ஒன்று முழுமையாக நீரில் மூழ்கியிருப்பதைக் காட்டியது.

இதுகுறித்துக் கருத்துரைத்த அரசு அங்கீகாரம் பெற்ற சுற்றுப்பயண வழிகாட்டி ஒருவர், “ஆக்ராவின் பெருமையான தாஜ்மகாலைப் பேண உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஏனெனில், இங்குள்ள சுற்றுலாத் துறையைச் சார்ந்தோருக்கு இது ஒன்றுதான் வாழ்வாதார நம்பிக்கை,” என்றார்.

மூன்று நாள்களாகப் பெய்த கனமழையால் ஆக்ரா நகரின் பல இடங்களில் நீர் தேங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்நகர் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்று நீரில் மூழ்கியுள்ளது; பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன; குடியிருப்புப் பகுதிகளையும் நீர் சூழ்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, பள்ளிகளை மூட ஆக்ரா நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Comments