Offline
வந்தே மெட்ரோ’ ரயில் திட்டம்: நாளை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி
Published on 09/15/2024 15:55
News

புதுடெல்லி: வந்தே பாரத் ரயில் திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, வந்தே மெட்ரோ என்ற புதுத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது இந்திய ரயில்வே துறை.

‘சாமான்யனின் ரயில்’ எனக் குறிப்பிடப்படும் இப்புதிய ரயில் திட்டத்தை பிரதமர் மோடி செப்டம்பர் 16ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளார்.

முழுக்க குளிர்சாதன வசதிகொண்ட ரயில் என்பதால் ‘சாமான்யனின் ரயில்’ எனக் குறிப்பிடுகிறார்கள்.

இப்புதிய ரயில் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. வந்தே மெட்ரோ ரயில் அதிகபட்சமாக 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும். வேகத்தை கூட்டவோ குறைக்கவோ இயலும் என்றும் பயண நேரத்தை குறைப்பதே தங்கள் நோக்கம் என்றும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

16 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில், ஒரே சமயத்தில் 1,150 பயணிகள் இருக்கையில் அமர்ந்தபடி பயணம் செய்யலாம். மேலும் 2,058 பயணிகள் நின்றபடி பயணம் மேற்கொள்ள இயலும்.

பல்வேறு மாநிலங்களில் உள்ள மெட்ரோ ரயில்களைப் போலவே வந்தே மெட்ரோ ரயிலிலும் தானியங்கிக் கதவுகள் பொருத்தப்பட்டிருக்கும் என்றும் ஒவ்வொரு பெட்டியிலும் நான்கு கதவுகள் இருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

பயணிகள் தங்களுடைய உடைமைகளை வைப்பதற்கும் கைப்பேசி மின்னூட்டிகளைப் பயன்படுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வந்தே மெட்ரோ முழுக்க குளிர்சாதன வசதி உள்ளது.

ஓட்டுநர்களுக்கான பகுதியிலும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள நிலையில் ‘எல்ஈடி’ விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் அகலமான ஜன்னல்கள் பயணத்தை அதிக சுவாரசியமாக்கும் என்கிறது ரயில்வே துறை.

ரயில் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களும் ‘எல்சிடி’ திரையில் தொடர் அறிவிப்புகளும் வெளியானபடி இருக்கும். இதன்மூலம் பயணிகளுக்கான பாதுக்காப்பும் வசதிகளும் உறுதிசெய்யப்படுவதாக ரயில்வே துறை அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த ரயிலில், மாற்றுத்திறனாளிகளும் எளிதில் பயன்படுத்தும் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. கைகளை உலர்த்தும் கருவிகளும் உள்ளன.

சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட முதல் வந்தே மெட்ரோ ரயில், குஜராத் மாநிலம் புஜ் - அகமதாபாத் இடையே இயக்கப்பட உள்ளது.

Comments