கோலாலம்பூர்:
பணியிடங்களில் பகடி வதை பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும் சுதந்திரமான, வெளிப்படையான, எளிதில் கிடைக்கக்கூடிய ரிப்போர்ட்டிங் சிஸ்டம் உள்ளிட்ட மறுசீரமைப்புகளை சுகாதார அமைச்சு அவசியம் அமல்படுத்த வேண்டும் என்று ஹர்ட்டால் டாக்டர் கொன்ட்ரெக் அமைப்பு வலியுறுத்தியது.
பகடி வதை தடுப்பு கொள்கைகளை அமல்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதும் அவசியம் ஆகும் என்று கோலாலம்பூரில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அந்த அமைப்பு கேட்டுக்கொண்டது.
பணியிடங்களில் நிகழும் பகடி வதை துன்புறுத்தல்களுக்கு காரணமானவர்களை அவர்கள் வகிக்கும் பதவிகளை பொருட்படுத்தாமல் பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்று ஹர்ட்டால் டாக்டர் கொன்ட்ரெக்ட் அமைப்பு கேட்டுக்கொண்டது.
கொள்கை சீர்திருத்தங்களில் மருத்துவ பணியாளர்களின் மன நலத்தில் அதீத கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதையும் இந்த அமைப்பு சுட்டிக் காட்டியது.