Offline

LATEST NEWS

நடிகர் சூரியின் உணவகத்திற்கு வந்த சிக்கல்
Published on 01/02/2025 04:17
Entertainment

மதுரை:பிரபல நகைச்சுவை நடிகர் சூரி சினிமா துறை மட்டுமின்றி உணவகம் உள்ளிட்ட தொழில்களையும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் அவரது சொந்த ஊரான மதுரையில் சூரி மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான உணவகங்கள் முக்கிய சந்திப்பு பகுதிகள், தெப்பக்குளம், ஊமச்சிகுளம், ரிசர்வ்லைன், திருநகர் மற்றும் ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகிறது.

இதில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் இயங்கி வரும் உணவகம் மீது வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்து உள்ளார்.

பொதுப்பணித் துறையினரால் இந்த உணவகம் செயல்பட 434 சதுரடி பரப்பு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உணவக நிர்வாகத்தினர் அருகில் அமைந்துள்ள செவிலியர் விடுதியில் கழிவு நீர் தொட்டி அமைக்கப்பட்டு இருக்கும் இடத்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கும் கூடுதலாக விதிமுறைகளை மீறி 350 சதுரடிக்கு நிரந்தரமாக ஷெட் அமைத்து ஆக்கிரமிப்பு செய்தும், 360 திறந்தவெளி ஆக்கிரமிப்பும் செய்துள்ளனர்.

கழிவு நீர் தேங்கும் செப்டிக் டேங்குகளின் மேற்பரப்பில் அமர்ந்து காய்கறிகள் வெட்டுதல், உணவு சமைத்தல், உணவு பொருட்களை பாக்கெட் போட்டு பேக்கிங் செய்தல் போன்ற பணிகளை இரவு, பகலாக மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் அதிக அளவில் தொற்று நோயை உண்டாக்கும் பெருச்சாளிகள், கரப்பான் திரிகின்றன.

செவிலியர் விடுதிக்கு காற்றோட்டம், சூரிய ஒளி வரும் விதமாக அமைக்கப்பட்ட ஜன்னல்கள் முழுவதையும் மறைத்து இந்த உணவக நிர்வாகத்தினர் மினரல் வாட்டர் கேன்கள் நிறைந்த அட்டை பெட்டிகளை அடுக்கி வைத்துள்ளனர்.எனவே செவிலியர்கள் ஜன்னலை கூட திறக்க முடியாமல் எப்பொழுதும் மூடியே வைத்துள்ளனர். அத்துடன் இந்த உணவகத்தின் அருகில்தான் குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவும், பிரசவ வார்டும் உள்ளது.

இவ்வாறு கழிவு நீர் தொட்டிகளின் நடுவிலும், பெருச்சாளிகள், கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடத்திலும் சுகாதாரமில்லாமலும், தரமற்ற வகையிலும் தயாரித்து சமைக்கப்படும் இந்த உணவு வகைகளால் ஏற்படும் நோய் தொற்றின் தீவிரம் பற்றி தெரியாமலேயே தினமும் ஏராளமான குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அவர்கள் உடன் தங்கியிருப்பவர்கள் இங்கு உணவு வகைகளை வாங்குகிறார்கள்.

Comments